Baby John Review: 'விஜய் குமாரை மிஞ்சுகிறாரா சத்ய வர்மா?' - எப்படி இருக்கிறது 'தெறி' இந்தி ரிமேக்?
2016-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் இந்தி ரீமேக்தான் இந்த 'பேபி ஜான்'. 'அதே டெய்லர் அதே வாடகை' என்கிற பாணியில்தான் இந்தி ரீமேக்கின் கதையையும் நகர்கிறது.
கேரளத்தில் அப்பாவியாக வாழ்கிறார் ஜான் டி சில்வா. அங்கிருக்கும் சில வில்லன் கேங்குகளால் இவரின் பழைய 'பாட்ஷா ரெக்கார்டுகள்' புரட்டப்படுகின்றன. ஐ.பி.எஸ் அதிகாரியாக இருக்கும்போது நிகழும் சில அநீதிகளால் தன் குடும்பத்தை இழந்து, வில்லனிடமிருந்து தப்பி கேரளாவில் மகளுடன் அமைதியாக வாழ்கிறார் என்ற உண்மை தெரிய வருகிறது. மெயில் வில்லன் அவருக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ஆக்ஷன் ஹீரோவை தட்டி எழுப்புகிறார். அதற்குப் பிறகு என்னானது என்பதே காளீஸ் இயக்கியிருக்கும் 'பேபி ஜான்' திரைப்படத்தின் கதை. 'தெறி' திரைப்படத்தின் கதைகளில் சிறு சிறு மாற்றங்களை மட்டும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் மோதல் புள்ளிக்குக் கூடுதலாகப் பழைய டெம்ப்ளேட் எலமெண்ட் ஒன்றையும் சொருகிவிட்டிருக்கிறார். இதைத் தாண்டி கதாபாத்திரங்களில் சின்ன சின்ன மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் அந்த சின்ன சின்ன மாற்றங்களும் `இதை எங்கேயோ பார்த்திருக்கிறோமா' என நினைவுபடுத்தி, எவ்வித சப்ரைஸும் இன்றி நகர்ந்து செல்கின்றன.
ஐ.பி.எஸ் அதிகாரியாகக் கம்பீர நடைபோடும் வருண் தவான் கலகலப்பான நடிப்பைக் கொடுத்து என்டர்டெயின் செய்கிறார். அந்தக் கதாபாத்திரம் அவருக்குச் சரியாகப் பொருந்தியும் இருக்கிறது. அக்ஷன் காட்சிகளில் படு கில்லாடியாக தனித்தன்மை பதிக்கும் வருண் தவான், ஜான் டி.சில்வா கதாபாத்திரத்தில் சில க்யூட் ரியாக்ஷன்களில் க்ரிஞ்ச் தன்மையை உணர வைக்கிறார். பாலிவுட்டில் தடம் பதிக்கும் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய டீசன்ட்டான பங்களிப்பைப் படத்திற்குக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், எமோஷனல் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஒரிஜினல் 'தெறி' திரைப்படத்தின் கேரள ஆசிரியைக் கதாபாத்திரத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர்.
எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் வமிக்கா கேபி, தனது வசீகரமான நடிப்பால் 'லைக்ஸ்' வாங்குகிறார். அதுமட்டுமல்ல, ஆக்ஷன் காட்சிகளில் நேர்த்தியான உழைப்பைக் கொடுத்து, 'வொண்டர் வுமனாக' மாறி, நம்மை விசிலடிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெர்ஃப் முகத்தில் அதே டெம்ப்ளேட் பெர்ஃபாமென்ஸ்தான். சில இடங்களில் அவரின் ஓப்பனை எக்ஸ்பிரஷன்களை மறைத்துவிடுகிறது. இதைத் தாண்டி நமக்குப் பரிச்சயமான காளி வெங்கட் பாலிவுட்டில் தடம் பதிக்கும் முதல் திரைப்படம் இது. சிறிது நேரம் வந்தாலும் எமோஷன் களத்தில் புகுந்து விளையாடி மனதில் பதிந்துவிடுகிறார். ஜாஃபர் சாதிக்கும் ஒரு சிறிய வில்லன் வேடத்தில் நடித்து `குட்' சொல்ல வைக்கிறார்.
ஒரிஜினல் வெர்ஷனிலிருந்து பல விஷயங்களை மெருகேற்றுவதாக நினைத்துச் சேர்த்திருக்கிறார்கள். ஆனால் அதுவும் பல மாஸ் மசாலா திரைப்படங்களில் ரீப்பட் அடித்த விஷயங்கள்தான். வழக்கமாக நாம் மாஸ் கமெர்சியல் படங்களையே தூசி தட்டி சேர்த்து சப்ரைஸ் டிவிஸ்ட் எனக் கொடுத்தது, `க்யா பையா?' என வருத்தத்துடன் நம்மைக் கேட்க வைக்கிறது.
ஒரு மாஸ் மசாலா திரைப்படத்திற்குத் தேவையான அத்தனையும் இத்திரைப்படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றன. ஆனால், அதில் சுவை குறைவாக இருப்பது ஏமாற்றமே! ஒரு பீக் காட்சியின் மாஸ் தன்மையை உணர்வதற்குள் 'Good Vibes Only' என்பது போன்ற களத்திற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பன்ச் வசனத்தைக் கொடுத்து 'உச்' சொல்ல வைக்கிறார்கள். இதைத் தாண்டி இரண்டாம் பாதியில் கதாநாயகன் ஆக்ஷன் அவதாரம் எடுக்குமிடத்திலும், க்ளைமேக்ஸ் காட்சியிலும் வரும் சில கிரிஞ்ச் காட்சிகளும் பார்வையாளர்களைச் சோர்வாக்குகின்றன. இறுதியாக ஏஜெண்ட் பாய் ஜானின் சப்ரைஸ் கேமியோவை அதிரடியாகக் கொடுத்து கொஞ்சம் சமாதானப்படுத்துகிறார் இயக்குநர். ஆனாலும் இவர்கள் ஏஜெண்ட்டுகளா அல்லது காவல் அதிகாரிகளா எனக் குழம்ப வைக்கிறார்.
இந்தி ரீமேக்கிற்காக மேக்கிங்கில் முக்கிய கவனத்தைச் செலுத்திய இயக்குநர் காளீஸுக்கு க்ளாப்ஸ் கொடுக்கலாம். இயக்குநருக்குக் கரம் கொடுத்துப் படத்தைப் பிரமாண்டமாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக். ஆனால், ஒரிஜினல் வெர்ஷனலிருந்த ஷாட் கம்போஸிங் கூட மாறாததால் கிரண் கெளசிக்கின் தனித்துவம் எங்கும் தென்படவில்லை.
மாஸ் காட்சிகளின் பின்னணி இசையில் மாஸ் காட்டும் தமன், எமோஷன்ல் காட்சிகளில் தொலைந்து போய்விடுகிறார். `நைன் மட்டகா' பாடல் நல்ல 'வைப்' நம்பர். பல காட்சிகளில் கலை இயக்குநர் முத்துராஜ்ஜின் நேர்த்தியான உழைப்பையும் பார்க்க முடிகிறது.
ஒரிஜினல் 'தெறி' வெர்ஷனில் சில மசாலா படங்களின் எலமெண்ட்டுகளை சேர்த்து ரீமேக்காகியிருக்கும் இந்த பேபி ஜானின் பில்டிங் ஸ்டிராங்காக இருந்தாலும் பேஸ்மண்ட் வீக்காகவே இருக்கிறது...!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...