ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: அயோத்தியில் அலைமோதும் பக்தா் கூட்டம்
பந்தலூர்: தொடர் கண்காணிப்பு... `அரிசி பிரியர்’ புல்லட்டை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை
அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட இளம் ஆண் யானை ஒன்று நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை உட்கொண்டு வந்தது. கடந்த சில தினங்களில் மட்டும் 30- க்கும் அதிகமான குடியிருப்புகளை சேதப்படுத்திய அந்த யானையை பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விடுவிக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
உள்ளுர் மக்களால் 'புல்லட் ' என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த யானை ஊருக்குள் வருவதைத் தவிர்க்க டிரோன் கேமராக்கள் மற்றும் நள்ளிரவிலும் தெளிவாக தெரியும் தெர்மல் கேமரா மூலம் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும், மதம் பிடித்த வளர்ப்பு யானைகளின் சாணத்தை கொண்டு வந்து கிராமப் பகுதிகளில் தெளித்தும் நெருப்பிலிட்டும் புகை உருவாக்கி வந்தனர். வீடுகளின் ஜன்னல் மற்றும் கதவுகளில் மிளகாய் தூள் தடவப்பட்ட துணிகளையும் தோரணமாக தொங்க வைத்திருந்தனர்.
சில பகுதிகளில் அந்த யானையின் நடமாட்டம் குறைந்தாலும் நேற்று முன்தினம் இரவு காவயல் பகுதிக்கு நுழைந்து குடியிருப்புகளை சேதப்படுத்தி அரிசியை எடுக்க முயன்றது. தொடர்ந்து அதே பகுதியில் அந்த யானை நடமாடினால் எதிர்கொள்ளல்கள் அதிகரிக்கும் என முடிவு செய்த வனத்துறை, அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் கால்நடை மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, கும்கி உதவியுடன் நேற்று மாலை அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அரை மயக்கத்தில் இருந்த அந்த யானையை இரண்டு கும்கிகள் உதவியுடன் பிரத்யேக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இது குறித்து பேசிய வனத்துறையினர், " அரிசி சுவைக்கு பழக்கப்படுத்தப்பட்ட அந்த இளம் ஆண் யானைக்கு சுமார் 20 வயதிற்குள் தான் இருக்கும். வீடுகளை சேதப்படுத்தும் அதன் நடத்தையை மாற்ற அனைத்து வகையான முயற்சிகளையும் செய்தோம். ஆனாலும், பலன் தரவில்லை. பகலில் வனப்பகுதியில் மேய்ச்சலில் இருந்தாலும் அரிசியை உட்கொள்ள இரவில் வீடுகளுக்குள் நுழைவதை தொடர்ந்து வந்தது. அதனால் தான் மயக்க மருந்து கொடுத்து பிடிக்கும் முடிவுக்கு வந்தோம்” என்றனர்.