Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழலியல் எழுத்தாளர்
கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தின், பந்தலூர் பகுதியில் நுழைந்த ஆண் யானை ஒன்று, நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வீடுகளின் ஓடு மற்றும் கதவு, ஜன்னல்களை உடைத்து, வீடுகளுக்குள் நுழைந்து அரிசியை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது. 'அரிசியின் ருசி பிடித்துப்போனதால்தான், அது அந்த யானை தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திக்கொண்டிருக்கிறது' என சொல்லப்பட்டு வருகிறது.
அது உண்மையா என்று தெரிந்துகொள்ள, 'ஆதியில் யானைகள் இருந்தன' என்று யானைகளின் இயல்புகள் பற்றிய புத்தகம் எழுதியுள்ள சூழலியல் எழுத்தாளர் கோவை சதாசிவம் அவர்களிடம் பேசினோம்.
''குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் மனிதர்களின் வன்முறையால் குதறப்பட்டுக்கொண்டிருக்கின்றன. யானையின் உணவாக இயற்கை அளித்த 82 வகைத் தாவரங்கள், 59 வகை மரங்கள். 23 வகை புற்கள் முளைக்கும் காடுகளில், கட்டடங்கள், தார்ச்சாலைகள், சுரங்கம், மின்திட்டம், தொழிற்சாலைகள், ஆன்மிகக் கூடங்கள், தொடர்வண்டிச் சாலைகள், தேயிலைத் தோட்டம், விவசாய நிலம், நீர்ப்பாசனத் திட்டம், இராணுவப் பயிற்சி முகாம், அகதி முகாம், கல்வி நிலையம் என்று நகர்மயம் ஆகிவிட்டதால், யானைகளின் உணவுக் களஞ்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஒரு வருடத்தில் யானைக்கூட்டங்கள் 500 சதுர கிலோ மீட்டர் வலசை போகும். உதாரணத்துக்கு, கேரளாவில் இருக்கிற முத்தங்காவில் வலசையை ஆரம்பித்தால், முதுமலை, பந்திப்பூர் வந்து என நடந்து, தெங்கு மரஹாடாவில் இறங்கி, சத்தியமங்கலத்துக்கு வெளியே பண்ணாரி, தர்மபுரிக்குப் போய் சரவணப்பள்ளி, அப்படியே ஆந்திரா வரை போகும். யானைகள் நேராக வலசை செல்லாது. 'ஸிக் ஸாக்' போன்ற வடிவில்தான் வலசை போகும். இப்படி ஒரே நேரத்தில் பல யானைக்கூட்டங்கள் பக்கம்பக்கமாக வலசை போகும். யானைகள் நகரும் விலங்கு. அவை ஒரே இடத்தில் இருக்காது. அதனால், யானைகளுக்கு பெரிய வனப்பகுதி தேவைப்படுகிறது. யானைகள் வலசை வருகிற பகுதிகளும் குடியிருப்புப்பகுதிகளும் மிக நெருக்கமாக இருப்பதாலும், காடுகள் மனிதமயமாகிக்கொண்டிருப்பதாலும், யானை-மனிதன் சந்திப்பு அல்லது மோதல் நிகழ்ந்து விடுகிறது.
இந்த விஷயத்தில் யானைகளின் இயல்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். யானைகள் ஓரே வலசைப்பாதையில்தான் வரும். அம்மாவுடன் வலசை வரும்போது அந்தக் காட்டில் மரக்கிளையை ஒடித்தோ, மரப்பட்டைகளை உரித்தோ சாப்பிட்ட யானைக்கன்று, வளர்ந்த பிறகும் அதே பாதை வழியாகவே வலசை வரும். அப்போது, அந்த ஆண் யானையின் வலசைப்பாதை தேயிலைத்தோட்டமாகவோ, மனிதக்குடியிருப்புகளாகவோ மாறியிருக்கும். தன்னுடைய சொந்த நிலம் காணாமல் போயிருப்பதை உணரும்போது, வளர்ந்த யானைக்கு கோபம் வரும். அதன் விளைவு என்னவாகும் இருக்கும் என்பதை நம்மால் உறுதியாக சொல்ல முடியாது'' என்றவர், பந்தலூரில் சுற்றிக்கொண்டிருக்கும் யானை குறித்து பேச ஆரம்பித்தார்.
''காடுகளுக்கு அருகே இருக்கும் ஊர்களுக்குள் ஒற்றை யானைகள் வருவது, குடியிருப்புப்பகுதிகளில் பல நாள்கள் சுற்றிக்கொண்டிருப்பது, தோட்டப்பயிர்களை உண்பது, வீடுகளுக்குள் நுழைந்து அரிசியை அள்ளிச் சாப்பிடுவது இவையெல்லாம் இதற்கு முன்னரும் நடந்திருக்கின்றன. குடியிருப்புப் பகுதிகளின் வழியாக வருகிற யானைக்கூட்டங்களில், குட்டிகளுடன் கூட்டமாக வருகிற யானைகள் அப்படியே கடந்துப்போய் விடும். ஆனால், ஒற்றையாக வருகிற யானைகளில் சில, 'இங்கே சுலபமாக நெல், கரும்பு போன்ற தங்களுக்குப் பிடித்த உணவுகள் கிடைக்கின்றன' என்பதைப் புரிந்து அங்கேயே தங்கி விடும். பந்தலூரில் நடமாடிக்கொண்டிருக்கிற புல்லட் யானையும் இந்த ரகமாகத்தான் இருக்கிறது.
அரிசியின் ருசி பிடித்துப்போனதால்தான், அந்த யானை வீடுகளை உடைத்து அரிசியை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது என்பது ஓரளவுக்கு உண்மைதான். ஏனென்றால், யானைகளுக்கு ரேஷன் அரிசியில் வருகிற வாசம் மிகவும் பிடிக்கும். ஒரு மூட்டை ரேஷன் அரிசி இருந்தாலும், யானை ஒரு படி அரிசிதான் சாப்பிடும். ஒரு படி என்பது அதன் ஒரு வாய்க்குத்தான் வரும். அந்த ஒரு வாய் அரிசிக்காகத்தான் அவ்வளவு பெரிய ஜீவன், ஊர்களுக்குள் நுழைந்து மக்களையும் அச்சுறுத்தி, தானும் அலைபாய்ந்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு தகவல், யானைகள் அரிசி மட்டுமல்ல, உப்பும் சாப்பிடும். மண்ணோடு கலந்திருக்கும் தாது உப்புகளைச் சாப்பிடும் பழக்கம் யானைகளுக்கு இருப்பதால், வீடுகளுக்குள் நுழையும்போது கொஞ்சம் உப்பையும் சுவைத்துவிட்டுப் போகலாம்'' என்றவரிடம், 'மத யானை சாணத்தில் ஸ்பிரே, புகை, மிளகாய்த்தூள் தோரணம் ஆகியவை யானையை விரட்டுமா' என்றோம்.
''இந்த வழிமுறைகள், மனிதர்கள் பல காலங்களாக செய்து வருபவைதான். கிட்டத்தட்ட இவற்றை 'ஒரு கை வைத்தியம் போல' என்று சொல்லலாம்'' என்றவர், ''யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும்படி பாதிக்கப்பட்ட மக்கள் போராடுகிறார்கள். ஆனால், அடர்ந்த வனப்பகுதி எங்கே இருக்கிறது? வனத்தை, வன உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய வனத்துறை, மக்கள் உயிரைக் காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் வேறு வழியில்லை என்பதும் நிசர்தனம். அந்த யானையைப் பிடித்த பிறகு, யானைக்கூட்டத்துடன் சேர்ப்பார்கள் அல்லது கும்கியாக்குவார்கள்.
இறுதியாக ஒருவார்த்தை, யானைகளுக்கும் மனிதனுக்கும் இடையில் எந்தப் பகையும் இல்லை. தற்போது நடக்கிற எதிர்கொள்ளலுக்குக் காரணம், அவற்றின் வாழ்விடத்தில் மனிதர்கள் போய் வாழ்வதால்தான். காடுகள் சுருங்க சுருங்க இந்தச் சிக்கல் இன்னும் அதிகரிக்கும்'' என்று எச்சரிக்கிறார் கோவை சதாசிவம்.
VIKATAN PLAY - A NEW AUDIO PLATFORM
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...