Tiger : முதுமலை காட்டில் இறந்து கிடந்த புலி - கள ஆய்வில் இறங்கிய வனத்துறை!
வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் காடுகளில் ஒன்றாக இருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம். பந்திப்பூர், முத்தங்கா சத்தியமங்கலம் உள்ளிட்ட வளம் நிறைந்த வனங்களும் முதுமலையுடன் இணையும் ஒருங்கிணைந்த வனப்பகுதி தான் புலிகள் பாதுகாப்பில் உலக அளவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உள்ளுர் பழங்குடி இளைஞர்களை புலிகள் பாதுகாப்பிற்கு பயன்படுத்தி வருகிறது வனத்துறை. வேட்டையிலிருந்து புலிகளை பாதுகாக்க 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வனப்பகுதியில் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், புலி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், முதற்கட்ட ஆய்வில் உயிரிழந்தது பெண் புலி என்பதை உறுதி செய்துள்ளனர். இறப்புக்கான காரணம் தெரியாத நிலையில், கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் உடற்கூறாய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடல் பாகங்களை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பும் ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். பெண் புலி இறந்து கிடந்த பகுதியைச் சுற்றிலும் ஏதேனும் தடயங்கள் தென்படுகிறதா என்பது குறித்தும் கள ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.