வார்டு மறுவரையறைக்குப் பின்னரே உள்ளாட்சித் தேர்தல்: தமிழக அரசு
குடியிருப்புக் கட்டடத்தில் தீ! 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி!
மத்தியப் பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்திலுள்ள குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
நாராயணப்பூரிலுள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் தரைத் தளத்தில் இயங்கிவந்த பால் கடையில் இன்று (டிச.21) அதிகாலை 4.45 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது தளத்தில் வசித்து வந்த அந்தக் கடையின் உரிமையாளரின் வீடு வரை தீ பரவியது.
இதனால், அந்த வீட்டில் வசித்து வந்த தினேஷ் கார்பெண்டர் (வயது-35), அவரது மனைவி காயத்ரி (30), அவரது மகள் இஷிகா (10) மற்றும் அவரது மகன் சிராக் (7) ஆகிய நால்வரும் தீக்காயங்களினாலும் மூச்சுத்திணறியும் பரிதாபமாக பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதையும் படிக்க: கடும் பனிமூட்டம்: தில்லியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ்!
இதுகுறித்து அம்மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தரைத் தளத்தில் உள்ள கடையில் உண்டான தீ, முதல் தளம் காலியாக உள்ள நிலையில் இரண்டாம் தளம் வரையில் பரவியதாகவும், அங்கு தீ பற்றக் கூடிய பொருட்கள் ஏதேனும் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததா என்று சந்தேகித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், பலியான குடும்பத்தினர் 2 வது தளத்தில் வசித்ததினால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.
தீக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியாத நிலையில், பால் கடையில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக இருக்கக்கூடுமோ என்று சந்தேகிக்கப்படுவதாகவும், தடவியல் அதிகாரிகள் தடயங்களை சேகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதிகாலையில், 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.