பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்வதே இலக்கு..! ஸ்ரேயாஷ் ஐயர் பேட்டி!
``தடைகளை உடைத்து சாதிக்க முடியும்..'' - சர்வதேச தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறன் மாணவி
விழுப்புரம் அரசுப்பள்ளி மாணவி சுபஸ்ரீ
சர்வதேச காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான தடகளப் போட்டியில், தமிழக மாணவி சுபஸ்ரீ பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். தடைகளை உடைத்து தங்கம் வென்ற மாணவியை, ஆசிரியர்கள் ஆடி பாடி வரவேற்றனர்.
விழுப்புரம் பீம நாயக்கன் தோப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுபஸ்ரீ. இவர், இந்த வருடம் டிசம்பர் மாதம் 5, 6-ம் தேதிகளில் மலேசியா கோலாலம்பூரில் நடைபெற்ற 10-வது சர்வதேச தடகள ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டியில், 4*400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப்பதக்கமும் 4* 100 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும் வென்று தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார் .
இவரது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக மாணவியை ஊர்வலமாக அழைத்துச் சென்று, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக நடனமாடியும் மலர்த்தூவியும் வரவேற்றனர்.
ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம்
சுபஸ்ரீயின் இந்த வெற்றி குறித்து அவரது பெற்றோர் ராஜரத்தினம் மற்றும் பூங்கொடி பெருமிதத்துடன் தெரிவிக்கையில், " 12-ம் வகுப்பு படிக்கும் சுபஸ்ரீக்கு சிறு வயது முதலே ஓட்ட பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒன்பது வயது முதல் 8 வருடமாக ஓட்டப்பந்தயத்திற்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறாள். இவளால் பிறவியில் இருந்தே வாய் பேச முடியாது மற்றும் காது கேளாது. இவ்வாறான குறைகளுடன் இருப்பதால் இவளை எந்தப் பள்ளியிலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். மிகவும் கடினப்பட்டு தான் பள்ளிகளில் சேர்ப்போம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை அரசு சார்ந்த பள்ளியில் படிக்கும் போது நடைபெற்ற பள்ளி அளவிலான ஓட்டப்பந்தயத்தில் நன்றாக ஓடி முதல் இடம் பிடித்தாள். அப்பொழுதுதான் இவளுக்கு ஓட்டப்பந்தயத்தில் ஆர்வம் இருப்பதனை கண்டறிந்தோம்.
கூடுதல் பயிற்சி
பின்பு சிறிது சிறிதாக வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டாள். ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை சாலை அகரம் பள்ளியில் படிக்கும் போது நடைபெற்ற மாவட்ட அளவிலான ஓட்டப்பந்தயத்தில் தங்க பரிசினை வென்றார்.
இதில் வெற்றி பெறுவதற்கு பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் கூடுதல் பயிற்சி அளித்தார்கள். இதில் சுபஸ்ரீ தங்கம் வென்ற பிறகு தான் இவ்வாறு திறமை உள்ள ஒரு மாணவி விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கிறார் என்று மற்றவர்களுக்கு தெரிய வந்தது. பின்பு நிறைய தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் சுபஸ்ரீக்கு பொருள்கள் வாங்கிக் கொடுத்தும் பணரீதியாகவும் உதவி செய்தனர்.
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு MRI பள்ளியில் பயிலும் போது மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400*400 மீட்டர், 400 * 100 மீட்டர் போன்ற தொடரோட்ட பந்தயத்தில் தங்க பரிசுகளையும் 400 மீட்டர் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கங்களையும் வென்று குவித்தார். இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற சிஎம் டிராபி தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்தாள்.
தினமும் நான்கு மணி நேரம் பயிற்சி
2023 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்திய தடகள அணிக்கான தேர்வு போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேர்ச்சி பெற்று சர்வதேச அளவில் வெற்றி பெற இரவு பகல் பாராமல் கடுமையாக பயிற்சி மேற்கொண்டாள். தனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்துக் கொண்டே இருந்தாள். உழைப்பை மட்டுமே தன்னுடையதாக வைத்துக் கொண்டு காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் என்று ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மழையிலும் வெயிலிலும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு தன்னை சர்வதேச போட்டிக்காக தயார்படுத்திக் கொண்டார்.
வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் பள்ளிக்குச் செல்வாள். இதற்காக அவரது தலைமை ஆசிரியரும் ஒப்புதல் கொடுத்தார்கள். சுபஸ்ரீ முடிந்தவரை நன்றாக படிப்பாள். உதடு அசைவுகளை வைத்தே பாடங்களை புரிந்து கொள்வாள். கணக்கு பாடம் அவளுக்கு மிகவும் பிடிக்கும். மற்ற மாணவர்கள் இவளிடமிருந்து கணக்கு பாடத்தை கற்றுக் கொள்வார்கள். பள்ளியில் இருக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இவளுக்கு படிப்பு சார்ந்தும் போக்குவரத்து சார்ந்தும் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.
சர்வதேச தடகள போட்டியில் சாதனை
சர்வதேச தடகள போட்டிக்கான தேர்வு கேரள மாநிலத்தில் நடைபெற்றது, தனது விடாமுயற்சியினால் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றார். பின்பு மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச ஆசியா பசிபிக் காது கேளாதோர் தடகளப் போட்டியில் 4*400 மீட்டரில் தங்கமும் 4*100 மீட்டரில் வெள்ளியும் வென்றார்.
சுபஸ்ரீயின் தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியின் எதிரொலியாகவே இந்த வெற்றியை பார்க்கிறோம். விளையாட்டு எந்த அளவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறாளோ அதே அளவிற்கு படிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுப்பாள். பள்ளியில் மேளதாளத்துடன் மிகுந்த வரவேற்பு கொடுத்தார்கள். பார்க்கும் அனைவரும் தன்னுடைய குழந்தையாக பாவித்து, வாழ்த்து தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடி பாடி வரவேற்று அசத்தி விட்டார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்."
`ஒலிம்பிக்கில் சாதனை படைப்பார்கள்' - உடற்கல்வி ஆசிரியர்
இதன் தொடர்ச்சியாக சுபஸ்ரீயின் உடற்கல்வி ஆசிரியர் சோபியா கூறுகையில், "எனது காது படவே நிறைய நபர்கள், நன்றாக இருக்கும் குழந்தைகளாலே தேசிய அளவில் வெற்றி பெற முடியாது என்று கூறுவர்கள். அப்போது மிகுந்த கோபம் வந்தாலும், சுபஸ்ரீயின் வெற்றி மட்டுமே இதற்கு பதிலாக இருக்கும் என்று கடுமையாக பயிற்சி கொடுத்தோம். காலை 6-8 மணி, மாலை 5 - 7 மணி என 4 மணி நேரம் கடுமையான பயிற்சி மேற்கொண்டாள். இந்த விடாமுயற்சியின் பலனாகவே நாங்கள் இந்த வெற்றியை பார்க்கிறோம். சுபஸ்ரீ போல் மேலும் 10 மாணவர்களை அடுத்த சர்வதேச அளவிலான போட்டிக்கு தயார் செய்து கொண்டிருக்கிறோம். பெரும்பாலும் வெளி மாநிலங்களில் நடக்கும் போட்டியில் உணவு அந்த அளவிற்கு உடலுக்கு ஏற்றவாறு இல்லை.
இதனால் உடல் சார்ந்த பிரச்னைகளும் ஏற்படுகிறது. உணவு சார்ந்த பிரச்னை இல்லாமல் இருந்திருந்தால், அவள் இன்னும் நன்றாகவே பங்கேற்று வெற்றி பெற்று இருப்பாள். அடுத்ததாக நாங்கள் சுபஸ்ரீயை ஒலிம்பிக்கிற்காக தயார் செய்கிறோம். விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் துணை முதல்அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் இவ்வாறு ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 10 காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு ஒலிம்பிக்கிற்கு இரண்டு மாதத்திற்கு முன்னர், சென்னையில் சிறப்பான பயிற்சி அளித்தால் நிச்சயம் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைப்பார்கள்.
தொடரோட்ட பந்தயத்தில் இரண்டு வகைப்படும் பாரா மற்றும் காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாத நபர்களுக்கான போட்டி. பொதுவாகவே பாராவில் வெற்றி பெற்றால் மாதம் ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் மானியமாக வழங்குகிறது தமிழக அரசு. ஆனால் இவ்வாறு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு எந்த சலுகையும் அரசு கொடுப்பதில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு உதவினால் நன்றாக இருக்கும்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் ஒரு நாளிற்கு இரண்டு மணி நேரமாவது விளையாடுவதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். படிப்பு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே அதே அளவிற்கு விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நிச்சயம் அந்த குழந்தையின் தனித்திறமை வெளிவரும். மாணவரின் விடாமுயற்சி ஆசிரியரின் தொடர்பயிற்சி பெற்றோர்களின் ஊக்கம் இவை அனைத்தும் சேர்ந்தாலே ஒரு குழந்தை வெற்றி பெற முடியும்." எனத் தன் மாணவியின் வெற்றியை தனது வெற்றியாக கருதி உரையை முடித்தார்.
`சாதிக்க முடியும்' -சுபஸ்ரீ
சுபஸ்ரீயின் அழகிய செய்கை மொழியை அவரது ஆசிரியர் மொழி பெயர்த்து "எனக்கு ஓட்டப்பந்தயம் மிகவும் பிடிக்கும். அதற்குப் பிறகு படிப்பு பிடிக்கும். என்னால் பேச முடியாது ஆனால் தடைகளை உடைத்து சாதிக்க முடியும். விடாமுயற்சியை அதிகரித்தாலே, நிச்சயம் வெற்றி பெறலாம். பெரும்பாலும் பள்ளிக்கு என்னால் செல்ல முடியவில்லை. படிப்பதற்கும் ,வீட்டு பாடத்திற்கும் எனது நண்பர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள். நீண்ட நாள்களாக பயிற்சியையே மேற்கொண்டேன், பல நாள்களுக்குப் பிறகு அவர்களை பார்த்ததும் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எனது வெற்றியை கண்டு அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். கிரீடம் வைத்து மாலை போட்டு வரவேற்றதை பார்த்து முதலில் பயந்தேன். அதற்குப் பிறகு அனைவரும் ஆடினதை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது." என்று தெரிவித்தார்.