ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜிஎஸ்டி விலக்கு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதையும் படிக்க: டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!
மிகச் சரியான வாய்ப்பு
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை நிறைவடைந்துள்ள போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. கடைசி இரண்டு போட்டிகளில் அவர்கள் சிறப்பாக விளையாடியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், விராட் கோலி பேட்டிங்கில் ஜொலிப்பதற்கு மிகச் சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பேட்ஸ்மேனாக சில நேரங்களில் உங்களது ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியிருக்கும். களமிறங்கிய சிறிது நேரத்தில் ஷாட்டுகளை விளையாட முயற்சிக்காமல், நேரம் எடுத்துக்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். மிகப் பெரிய வீரர் என்பதற்கு அதுவே சான்று. ஆட்டம் உங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் ரன்கள் தானாக வரும்.
இதையும் படிக்க: உற்சாகமாக இருக்கிறது..! ஆஸி. அணித்தேர்வு குறித்து முன்னாள் வீரர் கருத்து!
விராட் கோலி பேடுக்கு அருகில் வரும் பந்துகளை மிகவும் கவனம் கொடுத்து விளையாட வேண்டும். அவ்வாறு விளையாடும்போது, அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கும். விராட் கோலி ரன்கள் குவிக்காமல் இல்லை. மூன்று இன்னிங்ஸ்களுக்கு முன்பு அவர் சதம் அடித்து அசத்தினார். மெல்போர்னில் நடைபெறவுள்ள பாக்ஸிங் டே போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இதற்கு முன்னதாக மெல்போர்னில் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்துள்ளார். அவரால் மீண்டும் மெல்போர்னில் ரன்கள் குவிக்க முடியும் என்றார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகளில் (6 இன்னிங்ஸ்கள்) விளையாடியுள்ள விராட் கோலி, வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பெர்த் டெஸ்ட் போட்டி சதத்தை தவிர்த்து, அவர் 5 இன்னிங்ஸ்களில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.