`இனி பொதுமக்களுக்கு இது கிடைக்காது!' - சத்தமே இல்லாமல் தேர்தல் விதிகளில் திருத்த...
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திட்டங்கள் உள்ளன: இளம் ஆஸி. வீரர்
இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தன்னிடம் சில திட்டங்கள் இருப்பதாக இளம் ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இதையும் படிக்க: பாக்ஸிங் டே டெஸ்ட்டில் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் நம்பிக்கை!
திட்டங்கள் உள்ளன
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறவுள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும்.
இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தன்னிடம் சில திட்டங்கள் இருப்பதாக இளம் ஆஸ்திரேலிய வீரர் சாம் கொன்ஸ்டாஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக என்னிடம் சில திட்டங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு எதிராக விளையாட வாய்ப்பு கிடைத்தால், என்னால் சிறப்பாக செயல்பட முடியும். இந்திய பந்துவீச்சாளர்களுக்கு என்னால் அழுத்தத்தை ஏற்படுத்த முடியும். ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகவுள்ளது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். என்னுடைய கனவு நனவாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிராக விளையாட மிகுந்த ஆர்வமாக உள்ளேன். சவால்கள் எனக்கு பிடிக்கும்.
இதையும் படிக்க: டாப் ஆர்டர் நன்றாக விளையாட வேண்டும்; ரவீந்திர ஜடேஜா வலியுறுத்தல்!
எனக்கு அணியில் இடம் கிடைத்தவுடன் எனது பெற்றோரை தொலைபேசியில் அழைத்து பேசினேன். அணியில் இடம்பெற்றதை கூறியவுடன் என்னுடைய அம்மா அழத் தொடங்கிவிட்டார். நான் அவரை அழவேண்டாம் எனக் கூறினேன். என்னை நினைத்து என்னுடைய அப்பா கண்டிப்பாக பெருமையடைவார். இந்த பயணம் மிகவும் அருமையானது. எனது இந்த பயணத்தில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளேன். இந்த பயணத்தின்போது, எனது பெற்றோர் எனக்கு மிகுந்த ஆதரவளித்தார்கள் என்றார்.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமான நாதன் மெக்ஸ்வீனி சிறப்பாக செயல்பட தவறியதையடுத்து, கடைசி இரண்டு போட்டிகளில் இளம் வீரர் சாம் கொன்ஸ்டாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.