`இனி பொதுமக்களுக்கு இது கிடைக்காது!' - சத்தமே இல்லாமல் தேர்தல் விதிகளில் திருத்தம் செய்த மத்திய அரசு
ஹரியானாவில் கடந்த அக்டோபரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் மெஹ்மூத் பிரச்சா என்பவர் இந்தத் தேர்தலில் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகள் தொடர்பான வீடியோ, சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் ஆவணங்களின் நகல்களைக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் சமீபத்தில் தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த உயர் நீதிமன்றமும், பிரச்சா கோரிய ஆவணங்களின் நகல்களை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பெற வழிவகுக்கும் தேர்தல் நடத்தை விதிகள் 1961-ல் 93-வது விதியில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையுடன் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்தத் திருத்தத்துக்கு முன்பு தேர்தல் நடத்தை விதி 93 (2) (a)-ன் படி, `தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்கும்.' ஆனால், தற்போது இந்த விதியில் மேற்கொண்ட திருத்தத்தின்படி, `தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து ஆணவங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்கும்.' மேலும், திருத்தப்பட்ட விதியில், `வேட்புமனு படிவங்கள், தேர்தல் முகவர்கள் நியமனம், தேர்தல் முடிவுகள், தேர்தல் கணக்கு அறிக்கைகள் மட்டுமே பொது ஆய்வுக்குக் கிடைக்கும் ஆவணங்கள்.' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனவே, மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு இனி கிடைக்காது. அதாவது, சிசிடிவி காட்சிகள், வேட்பாளர்களின் வீடியோ பதிவுகள் போன்ற சில மின்னணு ஆவணங்கள் பொதுமக்கள் அணுகும் வகையில் பொது ஆய்வுக்குக் கிடைக்காது. இது குறித்து பேசிய தேர்தல் அதிகாரியொருவர், ``இந்த விதியை மேற்கோள் காட்டி, இதுபோன்ற மின்னணு ஆவணங்கள் கோரப்பட்ட நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இனி, இந்த விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மட்டுமே பொது ஆய்வுக்குக் கிடைக்கும் என்பதை இந்தத் திருத்தம் உறுதி செய்கிறது. இந்த விதியில் குறிப்பிடப்படாத எந்த ஆவணங்களும் பொது ஆய்வுக்குக் கிடைக்காது." என்று தெரிவித்தார்.
இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள்தான் இத்தகைய திருத்தத்தை மேற்கொள்ள வழிவகுத்ததாக மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்தத் திடீர் திருத்தத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ், ``தேர்தல் ஆணையம் ஏன் வெளிப்படைத்தன்மைக்கு அஞ்சுகிறது. இதனை சட்ட ரீதியாக நாங்கள் அணுகுவோம்." எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...