உலக செஸ் சாம்பியன் குகேஷ் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்திய பெண் ஓவியர்!
கோவை : இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி.குகேஷின் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பெண் ஓவியர் ரேவதி சௌந்தர்ராஜன்.
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று (டிச. 17) பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கோவை மாவட்டம் கருண்யா பகுதியை சேர்ந்தவர் ரேவதி சௌந்தர்ராஜன். இவர் தனியார் பள்ளி விடுதியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மரத்தூள்கள், காய்கறி, தானிய வகைகள் என பல்வேறு இயற்கை பொருள்களை கொண்டு ஓவியம் வரைந்து வருகிறார்.
இதையும் படிக்க |நாடாளுமன்ற நுழைவாயிலில் என்ன நடந்தது என உலகத்திற்குத் தெரிய வேண்டாமா? - ப. சிதம்பரம்
இந்த நிலையில், டிசம்பர் 2024 இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் சாதனையை கௌரவிப்பது மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கும் வகையில் பெண் ஓவியர் ரேவதி சௌந்தரராஜன் வண்ண நூலால் குகேஷின் உருவத்தை வரைந்து குகேஷ்-க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
குகேஷ் உருவப்படத்தை 3 1/4 அடி உயரம் 3 அடி அகலத்தில் காடா துணியினை வைத்து வண்ண நூலால் வரையப்பட்டுள்ளதை பார்த்து ரசித்த அந்த பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் ரேவதி சௌந்தரராஜனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.