அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது: கர்நாடக அமைச்சர் விமர்சனம்!
அம்பேத்கர் குறித்துப் பேசிய விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கர்நாடக அமைச்சர் விமர்சித்துள்ளார்.
கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே இன்று செய்தியாளர்களுடன் பேசுகையில், “கடவுளின் பெயரை உச்சரித்தால் ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இந்தப் பிறவியில் அம்பேத்கர் பெயரை உச்சரித்தால் அரசியல், சமூக, பொருளாதார சமத்துவம் மற்றும் சுயமரியாதையான வாழ்வு கிடைக்குமென்று எனக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.
மேலும், அமித் ஷா குறித்து விமர்சித்துப் பேசிய அவர், “அமித் ஷாவை வெறிநாய் கடித்துவிட்டது. அம்பேத்கரும் சமத்துவமும் அமித் ஷாவின் சிந்தனையில் இல்லை. அவரின் கொள்கை மற்றும் சித்தாந்தத்தில் அவை விடுபட்டுள்ளன.
அம்பேத்கர் மற்றும் பசவரின் தத்துவம் வளரும்போது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அழியும்” என்று அவர் கூறினார்.
இதையும் படிக்க | சம்பல் ஜாமா மசூதி அருகேயுள்ள கோவிலில் தொல்லியல் துறை ஆய்வு!
இந்த விவகாரம் குறித்து நேற்று (டிச. 20) சட்டப்பேரவையில் விமர்சித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “அரசமைப்புச் சட்டத்தை எழுதியதால்தான் அம்பேத்கா் மீது பாஜகவினருக்கு கோபம். பாஜகவின் கொள்கை அமைப்பான ஆா்.எஸ்.எஸ். அம்பேத்கா் எழுதிய அரசமைப்புச் சட்டத்தை என்றைக்கும் ஏற்றுக்கொண்டதே இல்லை. இதுகுறித்து அப்போதே விமா்சித்து கட்டுரை எழுதியுள்ளது. பூமி இருக்கும் வரை அம்பேத்கரின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்போம்" என்று தெரிவித்தார்.
மாநிலங்களவையில் தான் பேசியதை காங்கிரஸ் திரித்துவிட்டதாகவும், அம்பேத்கர் மற்றும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் வழக்கம்போல அறிக்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் நடைமுறையைக் கடைபிடிப்பதாகவும் அமித் ஷா குற்றம்சாட்டியிருந்தார்.