Robin Uthappa: ரூ. 23 லட்சம் PF மோசடி... உத்தப்பாவிற்குக் கைது வாரண்ட்; பின்னணி என்ன?
இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு வருங்கால வைப்பு நிதி மோசடி தொடர்பாகக் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது
கர்நாடகாவைச் சேர்ந்தவரான இவர், சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Centaurus Lifestyle Brands Pvt Ltd) என்ற ஆடை நிறுவனத்தின் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.
இதில் வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வருங்கால வைப்பு நிதிக்காக ரூ. 23,36,602 நிறுவனத்தின் சார்பில் பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது. பிராந்திய பி.எஃப் (PF) ஆணையர் சடாக்ஷரி கோபால் ரெட்டி அறிக்கையின் படி, ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் இந்தத் தொகையை அந்நிறுவனம் செலுத்தவில்லை.
சட்டப்படி இது குற்றம் என்பதால், உத்தப்பாவைக் கைது செய்யுமாறு கிழக்கு பெங்களூருவிலுள்ள புலகேசிநகர் காவல் நிலையத்துக்கு டிசம்பர் 4-ம் தேதியிட்ட கைது வாரண்ட் அனுப்பி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். உத்தரவின்படி, கைது வாரன்டில் இருந்த உத்தப்பாவின் வீட்டுக்கு போலீஸார் சென்று பார்த்தபோதுதான், அவர் இங்கு வசிக்கவில்லை துபாய்க்குக் குடியேறிவிட்டார் என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது. கைது வாரண்ட் உத்தரவின்படி டிசம்பர் 27-ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் அதற்குள் ரூ. 23 லட்சத்தைக் கட்ட வேண்டும். அப்படியில்லையெனில் கைதுசெய்யப்படுவார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...