மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்
AUSvIND: `இளம் வீரன்' - ஆஸ்திரேலியா அழைத்து வரும் 19 வயது ஓப்பனர் - யார் இந்த கான்ஸ்டஸ்?
பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் தொடர் 1-1 என சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில், மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கான அணியை ஆஸ்திரேலியா அறிவித்திருக்கிறது. அதில் சாம் கான்ஸ்டஸ் என்ற 19 வயது வீரரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. யார் இந்த சாம் கான்ஸ்டஸ்?
ஆஸ்திரேலியா அணி கடந்த மூன்று போட்டிகளிலுமே நேதன் மெக்ஸ்வீனி என்கிற அறிமுக வீரரை ஓப்பனராக இறக்கியிருந்தது. ஆனால், அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 6 இன்னிங்ஸ்களில் 72 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். பும்ராவுக்கு எதிராக கடுமையாக திணறியிருந்தார். 'கனவாக இருந்த வாய்ப்பு கைக்கு எட்டிய போதும் என்னால் சரியாக செயல்பட முடியவில்லை.' என மெக்ஸ்வீனியே வருத்தமாக பேசியிருந்தார்.
இந்நிலையில்தான், ஆஸ்திரேலியா அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவித்திருக்கிறது. அதில், நேதன் மெக்ஸ்வீனியை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சாம் கான்ஸ்டஸை இணைத்திருக்கிறார். கான்ஸ்டஸ் 19 வயதே ஆகும் இளம் வீரர்.
வலதுகை பேட்டரான இவர் பிரைம் மினிஸ்டர் லெவனுக்கு எதிராக இந்திய அணி ஆடிய போட்டியில் சதம் அடித்திருந்தார். அதற்கு முன்பாக இந்திய A அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் 73 ரன்களை எடுத்திருந்தார். சமீபத்தில்தான் பிக்பேஸ் லீகிலும் அறிமுகமாகியிருந்தார். அதிலும் நன்றாகவே ஆடியிருந்தார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் சதமடித்திருந்தார். இதுவரை 11 முதல்தரப் போட்டிகளில் ஆடி 718 ரன்களை 42.23 ஆவரேஜோடு எடுத்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு முதல் 3 போட்டிகளிலுமே ஓப்பனிங் கூட்டணி சிறப்பாக அமையவில்லை. மெக்ஸ்வீனியை தவிர்த்து இன்னொரு ஓப்பனரான கவாஜாவும் 6 இன்னிங்ஸ்களில் 63 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். தொடரை வெல்ல வேண்டுமெனில் ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனர்கள் க்ளிக் ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அதிரடியாக 19 வயது இளம் வீரரை ஆஸ்திரேலியா அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது.