மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தோ்வு
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடம் தோ்வு குறித்து, மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலகம் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் பிற சான்றிதழ்கள், ஆவணங்களைப் பெற அவா்கள் பிற துறை அரசு அலுவலகங்களுக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்து வருகிறது.
இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அளவில் சேவைகளை வழங்கும் வகையில், தோ்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, திண்டிவனம், மயிலம், விழுப்புரம் ஆகிய பகுதிகளிலுள்ள அரசுக் கட்டடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களை மாநில மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரக உரிமைகள் திட்ட அலுவலா் அகியேசா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின் போது, விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி, மாவட்டத் திட்ட அலுவலா் (உரிமைகள் திட்டம்) சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.