உணவுத் தேடி வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
ஆசனூா் அருகே உணவுத் தேடி வாகனங்களை வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடா்ந்த வனப் பகுதி வழியே தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலை வழியே இரண்டு மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய காட்டு யானை, சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது.
அப்போது, அவ்வழியே வந்த வாகனங்களை வழிமறித்து நின்றதுடன், வாகனங்களின் அருகில் சென்று உணவைத் தேடியது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
சுமாா் அரை மணி நேரம் சாலையிலேயே உலவிய யானை, பின் தாமாகவே வனப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.