`பாதுகாப்பு இல்லை; மணல் கடத்தலுக்கு அதிகாரிகள் ஆதரவு’ - டிஜிபிக்கு ராஜினாமா கடிதம் எழுதிய காவலர்
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முதல் நிலை காவலர் ஒருவர் தன்னை காவல் பணியிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு எழுதிய ராஜினாமா கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளை தொடர்புப்படுத்தி பெரும் விளக்கத்துடன் கூடிய ராஜினாமா கடிதத்தை காவலர் பிரபாகரன், டி.ஜி.பி.க்கு எழுதியிருப்பதால் இது காவல் வட்டத்திலும் பெரும் சூட்டை கிளப்பி இருக்கிறது.
இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வருபவர் பிரபாகரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, முறையான அனுமதி இன்றி மணல் மற்றும் ஜல்லிக்கற்கள் கடத்தியவர்களை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்தசம்பவத்தில் காவல் அதிகாரிகள், மணல் கொள்ளை கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மணல் கடத்தலை தடுத்த பிரபாகரனுக்கு, கடத்தல் கும்பல் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது
இதனால் பணியில் விரக்தி அடைந்த காவலர் பிரபாகரன், `காவல் பணியில் உள்ள தனக்கு பாதுகாப்பு இல்லை. தவறை தடுத்து சம்பந்தப்பட்டவர்களை தண்டனைக்கு உட்படுத்தவேண்டிய அதிகாரிகளே கடத்தலுக்கு துணை போகிறார்கள். எனவே, கீழ்நிலை காவலர்களுக்கு பணியில் பாதுகாப்பு இல்லை. தனது வேலையை ராஜினாமா செய்வதாக’ பணியில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை விவரித்து அதற்குண்டான ஆதாரங்களுடன் தமிழக டி.ஜி.பி.க்கு விரிவான கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும் அந்த கடிதத்தில், மணல் கடத்தலை தடுத்து உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும் கடத்தல் கும்பலின் மீது நடவடிக்கை எடுக்காமல் சிவகிரி காவல் ஆய்வாளர் அவர்களை விடுவித்ததாகவும், சரகத்திற்குள் நடக்கும் மணல் கடத்தல் மற்றும் ஜல்லி கல் கடத்தலுக்கு சரக துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் உடந்தையாக இருக்கின்றனர் என்றும் உயர் அதிகாரிகளை தொடர்புபடுத்தி குறிப்பிட்டிருக்கிறார்.
இது காவல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவலர் பிரபாகரனின் இந்த கடிதம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட காவல் துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி காவல்துறை தலைமை இடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால், காவலர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இதற்கிடையே தனது பணி ராஜினாமா ராஜினாமா குறித்து காவலர் பிரபாகரன், கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.