திருப்பத்தூர்: வணிக வளாகத்தின் மோசமான நிலையை விவரித்த விகடன்.. சீரமைப்புப் பணியிலிறங்கிய அதிகாரிகள்!
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சிக்குச் சொந்தமான அண்ணாமலை வணிக வளாகங்கள் உள்ளது . இங்கு மொத்தம் 80-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நெட் சென்டர், போட்டோ ஸ்டூடியோ, துணிக்கடை, உணவகங்கள், தொலைபேசி கடை, தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடை போன்ற பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இந்த வணிக வளாகம் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பழைய கட்டடம் என்பதால் மிகவும் சேதமடைந்து எவ்வித பராமரிப்பின்றி கிடந்தது.
இதைப் பற்றி அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்காரர்களிடம் விசாரித்தபோது, "ஆமாம்... இந்த இடம் பல வருடங்களாகவே இப்படித்தான் உள்ளது. எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்க சொந்த பணத்தில்தான் மேற்க் கூறை இடிந்த போது இந்த கட்டடத்துக்கு மோல்டிங் போட்டோம். வரப் பணத்தை மொத்தம் இதற்கே செலவு செய்கிறோம். இதனால் நாங்கள் தான் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகிறோம். மேலும் கட்டடத்தின் மேலே புற்கள் வளர்ந்து மழை பெய்யும் பொழுது தண்ணீர் குளம்போல் தேங்கி கட்டடத்தில் இறங்கி வருகிறது. இதனால் கடைக்குள் இருக்கும் பல பொருள்கள் சேதமடைகிறது. கத்துக்கிட்டத் தொழிலும் விட முடியாமல் கடையும் விட முடியாமல் கஷ்டப்பட்டுத்தான் பொழப்பு நடத்திட்டுவர்றோம். இந்த விவகாரத்தைத் தெளிவாகப் பல முறை பல அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறியுள்ளோம். சரி செய்கிறோம் என்பார்கள் ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை." எனக் குமுறினார்கள்.
நாம் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்துப் பேசினோம். ``விரைந்து நடவடிக்கை எடுக்க வழிவகை செய்கிறோம்" எனக் கூறியிருந்தார். இது தொடர்பாக கடைக்காரர்களிடம் பேசியும், நேரடியாக விசிட் செய்தும் மோசமான நிலை குறித்து விகடன் தளத்தில் (11/12/2024) ``உசுர கையில பிடிச்சிட்டு பிழைப்பு நடத்துறோம்'- சிதிலமடைந்த நகராட்சி வணிக வளாகம்; குமுறும் வணிகர்கள்!" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பேசினோம். அதன் எதிரொலியாக அதிகாரிகள் கடைக்காரர்களின் கஷ்டங்களைக் கருத்தில் கொண்டு சேதமடைந்த கட்டடத்தைச் சீரமைத்து வருகிறார்கள். இது குறித்து அந்தக் கட்டடத்தின் கான்ட்ராக்டரிடம் பேசினோம். ``தற்போது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட கட்டடங்களைச் சீரமைத்துக் கொண்டு வருகிறோம். இது முடிந்த உடன் அடுத்த கட்டடத்தையும் சரி செய்வோம்" என்றார்.