"எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் யாரும் அரசியல் செய்ய முடியாது”- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
தூத்துக்குடியில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம் ஆகிய தாலுகாக்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் மானாவரி விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த புரட்டாசி முதல் வாரத்தில் இந்த நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி, மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி, சூரிய காந்தி போன்ற பயிர்களை பயிரிட்டனர்.
இதில் உழவு, களை பறிப்பு, மருந்து தெளிப்பு, உரமிடுதல் என ஏக்கர் ஒன்றுக்கு முப்பதாயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டுள்ளது. இது தவிர குருத்துப்பூச்சி தாக்குதல், காட்டுப்பன்றிகளால் சேதம் என பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பெருமழையால் குறைந்தகால வித்துக்களான உளுந்து, பாசி, கொத்தமல்லி, வெங்காயம் மிளகாய் போன்றவைகள் வெள்ளச்சேதம் ஏற்பட்டு அழுகி விட்டது. இது தவிர பல கிராமங்களில் குளம், குட்டைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், சூரியகாந்தி போன்ற பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் ஐந்து ஏக்கர் என்ற வரம்பைத் தளர்த்தி முழுமையாக நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் விவசாயி எத்தனை ஏக்கர் பயிரிட்டு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அதிகபட்சமாக ஐந்து ஏக்கர் வரை மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. இதனால் ஐந்து ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டைப் போல் ஐந்து ஏக்கர் என்ற வரம்பு நிர்ணயம் செய்யாமல் விதிகளை தளர்த்தி பாதிக்கப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் ஒரு மகத்தான மக்கள் தலைவர். அரசியல் இயக்கத்தில் இந்தியாவிலேயே ஒரு இயக்கத்தை ஆரம்பித்தவுடன் முதல் பொதுத் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற வரலாற்றை படைத்தவர்.
தமிழகத்தில் மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலே முதல் தேர்தலில் ஆட்சி அமைத்தது மட்டும் இல்லாமல் மூன்று தேர்தலிலும் தொடர்ந்து வெற்றி பெற்று அவர் மறைகின்ற வரை வெற்றிக்கொடி நாட்டியவர். அவர் மறைந்து 38 ஆண்டுகளை தாண்டிச் சென்றாலும் கூட இன்றைக்கும் கூட அவரை ஒப்பிடுகின்ற அளவிற்கு மக்கள் மனதிலே இடம் பிடித்த மகத்தான தலைவராக இருக்கின்ற காரணத்தினால் அவர் பெயரைச் சொல்லாமல் இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் யாரும் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரிக்காமல் அரசியல் செய்ய முடியாது. அதனால்தான் எம்.ஜி.ஆருடன் பிரதமர் மோடியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.” என்றார்.