Health & Beauty: காலை நேர குளியலில் ஒளிந்திருக்கிறது அழகும் ஆரோக்கியமும்..!
சரும பராமரிப்பு என்பது சருமத்தை வெள்ளை வெளேரென்று மாற்றுவது கிடையாது. உங்களுடைய ஒரிஜினலான நிறத்தை பிளாக் ஹெட், ஒயிட் ஹெட், டெட் செல் என எந்த மாசு மருவும் இல்லாமல், ரோஜாவின் ஒற்றை இதழ்போல மென்மையாக வெளிப்படுத்துவதுதான். இப்படிப்பட்ட சருமத்தை நீங்களும் பெறுவதற்கு இயற்கை வழிகள் சொல்லித் தருகிறார் ஆயுர்வேத காஸ்மெட்டாலஜிஸ்ட் ரேகா ராவ்.
சரும அழகுக்கு முதல் எதிரி மலச்சிக்கல். தினமும் இரவு உணவுக்குப் பிறகு கண்டிப்பாக ஒரு துண்டு பப்பாளிப்பழம் சாப்பிட உடம்பின் உள்ளே கழிவுகள் சேராது. உள்ளே சுத்தமாக இருந்தால், அது மெல்ல மெல்ல வெளிப்பகுதியிலும் எதிரொளிக்க ஆரம்பிக்கும். எத்தனை வேலைப்பளு இருந்தாலும் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை என்று தினமும் ஒரு பழம் கட்டாயம் சாப்பிடுங்கள். வீட்டில் பழமே இல்லையென்றால் லெமன் ஜூஸாவது தேன் கலந்து குடியுங்கள். ஒரு மாதத்திலேயே சரும பளபளப்பில் நல்ல வித்தியாசம் தெரியும்.
கடலை மாவு, அரிசி மாவு, பாசிப்பயறு மாவு மூன்றையும் சம அளவு எடுத்து, வெறும் தண்ணீரில் கலந்து பேக் போல ரெடி செய்யுங்கள். முகம், கழுத்து என்று எங்கெல்லாம் சருமம் தளர்ந்துபோய் இருக்கிறதோ அங்கெல்லாம் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து குளியுங்கள். சருமம் இறுக்கமாக ஆரம்பிக்கும். அரிசி மாவும் பாசிப்பயறு மாவு கிடைக்கவில்லை என்றாலும் கடலை மாவிலாவது பேக் போடுங்கள். கடலை மாவுக்கு சருமத்தை இறுக்கமாக்கும் தன்மை அதிகம்.
காலையில் எழுந்ததில் இருந்து அரை மணி நேரத்துக்குள் குளிப்பது மட்டுமே சருமத்தின் இறந்த செல்களை நீக்குவதற்கான முறையான வழி. ஏனென்றால், நம் உடலில் இரவு 11 மணியில் இருந்து ஒவ்வொரு உறுப்பாக கழிவு நீக்க வேலையை செய்ய ஆரம்பிக்கும். இதில் கடைசியாக காலையில் கழிவுகளை நீக்குகிற உறுப்பு சருமம். அதனால் கண் விழித்த சிறிது நேரத்துக்குள் குளித்துவிட்டால் இறந்த செல்கள் அத்தனையும் வெளியேறி விடும். அழகு, ஆரோக்கியம் இரண்டையும் காலை நேர குளியல் தரும். தவிர, நகச்சூடு அளவுள்ள தண்ணீர் தான் சருமத் துவாரங்களை மென்மையாகத் திறந்து இறந்த செல்களை வெளியேற்றுவதோடு, மறுபடியும் துவாரங்களை மூடவும் செய்யும். அதிகமாக சூடுள்ள தண்ணீர் சரும துவாரங்களைத் திறந்து இறந்த செல்களை வெளியேற்றுமே தவிர துவாரங்களை மறுபடியும் மூடாது. இதனால், சருமம் மெல்ல மெல்ல உலர்ந்து, தளர ஆரம்பிக்கும். இறந்த செல்களை வெளியேற்ற எங்களுக்கு இயற்கையான ஸ்கிரப்பரும் வேண்டும் என்பவர்கள் உலர்ந்த மாதுளைத் தோலை பாசிப்பயிறுடன் சேர்த்து அரைத்து, உடம்பில் தேய்த்துக் குளிக்கலாம். சருமத்தில் நமைச்சல் இருந்தால், கைப்பிடி வேப்ப இலை, துளசியிலை அல்லது ஒரு டீஸ்பூன் துளசிப் பொடி, அரை டீஸ்பூன் பூசு மஞ்சள் தூள் ஆகியவற்றை குளிக்கும் நீரில் போட்டு, காலையில் அந்தத் தண்ணீரில் குளித்து விடுங்கள்.
நோ மசாலா ஐட்டம்ஸ், ஒன்லி ஆவியில் வேக வைத்த உணவுகள், பிறகு தினமொரு இளநீர், பழங்கள்... இந்த நான்கும்தான் இயற்கையான பொலிவு தரும் அழகு ரகசியங்கள். இவற்றைத் தவிர, தினமும் காலையில் பெங்களூரு தக்காளியை தண்ணீர் விடாமல் ஜூஸ் போட்டு குடித்தால், ரத்தவோட்டம் சீராகி, சருமத்தின் மேல் பகுதி லைட் போட்டது போல பளிச்சிட ஆரம்பிக்கும்.
எல்லோருக்கும் தெரிந்த வழி மாய்ஸ்ரைசர்தான். ஆனால், அதைவிட இயற்கையான விட்டமின் ஈ நிறைந்த செக்கு தேங்காய் எண்ணெய்தான் பெஸ்ட் சாய்ஸ். குளித்தவுடன் லேசான ஈர உடம்புடன் இருக்கும்போது, உடம்பில் சருமத் துவாரங்கள் திறந்திருக்கும். இந்த நேரத்தில் சிறிதளவு செக்கு தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டால், 3 நிமிடங்களில் எண்ணெய் சருமத்தினுள்ளே போய்விடும். இந்த இயற்கை மாய்ஸ்ரைசர் இரவு வரை தாங்கும். இதைத் தவிர, உங்கள் சருமம் எப்போதும் ஈரப் பதத்துடன் இருக்க வேண்டுமென்றால், தினமும் ஒரு டீஸ்பூன் உருக்கிய நெய்யை காலை அல்லது மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். நீரிழிவு அல்லது கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள் உங்கள் மருத்துவரை ஆலோசித்து இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...