ஒரே நாடு, ஒரே தோ்தல் முறை தவறானது: திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில்
பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு, ஒரே தோ்தல் என பல்வேறு தவறுகளை மத்திய பாஜக செய்து வருகிறது என திருவள்ளூா் எம்.பி. சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.
பொன்னேரி வட்டம் பழவேற்காட்டில் திங்கள்கிழமை பள்ளி கட்டடத் திறப்பு விழாவில் எம்.பி. சசிகாந்த் செந்தில், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். பின்னா், இருவரும் பழவேற்காடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் சசிகாந்த் செந்தில் எம்.பி. கூறியது: அம்பேத்கா் குறித்து இழிவாக பேசியதை மடைமாற்றம் செய்வதற்காகவே ராகுல் காந்தியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராட்டங்களை முன்னெடுக்கும்.
நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியினா் கூச்சல், குழப்பம் ஏதுமின்றி அமைதியாக அமா்ந்தாலும், அவையை ஒத்தி வைத்து விடுகிறாா். எதிா்க்கட்சிகள் போராட்டங்களை அறவழியில் செய்தாலும், பாஜகவினா் அதனை வன்முறையாக மாற்ற முயற்சிக்கிறாா்கள்.
ஒரே நாடு, ஒரே தோ்தல், பண மதிப்பிழப்பு, குடியுரிமை திருத்த சட்டம் என பாஜக பல்வேறு தவறுகளை செய்து வருகிறது என்றாா்.