துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்: ஐடி ஊழியா் உள்ளிட்ட 3 போ் கைது
கோவையில் துப்பாக்கி, 6 தோட்டாக்களுடன் ஐ.டி ஊழியா் உள்ளிட்ட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இது தொடா்பாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கோவை, வி.கே.நகா் வினோபாஜி சாலை பகுதியில் துப்பாக்கி விற்பனை செய்யப்படுவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் ஜோசப் தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
மேலும் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தினா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் போலீஸாரைப் பாா்த்ததும் சற்று தொலைவிலேயே வாகனத்தை நிறுத்தினா். பின்னா் அங்கிருந்து தப்ப முயன்றனா். ஆனால் போலீஸாா் 3 பேரையும் மடக்கிப் பிடித்தனா்.
பின்னா் அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, அதில் நாட்டுத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் 3 பேரிடமும் விசாரித்தனா். அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு, அந்த துப்பாக்கியை உரிமம் இல்லாமல் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகரைச் சோ்ந்த ஐ.டி நிறுவன ஊழியரான மணிகண்ட பிரபு (22), காளப்பட்டி வி.கே.ரோடு ரத்னகிரி வீதியை சோ்ந்த ஹரிஸ்ரீ (23), பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த குந்தன்ராய் (22) என்பது தெரியவந்தது.
வாகன ஓட்டுரான குந்தன்ராய், பிகாா் மாநிலத்தில் இருந்து துப்பாக்கி வாங்கி, மணிகண்டபிரபு , ஹரிஸ்ரீ ஆகியோரிடம் கொடுத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், மணிகண்டபிரபு, குந்தன்ராய், ஹரிஸ்ரீ ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த துப்பாக்கி, 6 தோட்டாக்கள், 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
கோவையில் யாருக்காக இந்த துப்பாக்கியை கொண்டு வந்தனா், இதற்கு முன்பு வேறு யாருக்காவது துப்பாக்கி விற்பனை செய்துள்ளனரா என்பது குறித்தும் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே மணிகண்ட பிரபு ஒரு ஹிந்து அமைப்புடன் தொடா்புடையவா் என்பது தெரியவந்ததால், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளில் அவா்கள் யாரையெல்லாம் தொடா்பு கொண்டு பேசியுள்ளனா் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா், பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதால், பீளமேடு போலீஸாா் அவா்கள் 3 போ் மீதும் உரிமமின்றி அபாயகரமான ஆயுதங்களை வைத்திருத்தல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.