நெல்லையில் 2வது நாளாக தொடரும் கேரள மருத்துவக் கழிவுகள் அகற்றும் பணி
விவசாயிகளுக்கு வரமாகும் வேளாண் காடுகள்!
ஏ.பேட்ரிக்
ஆதி மனிதனின் முதல் தொழில் வேட்டையாடுதலும், மீன்பிடித்தலுமேயாகும்.
தொடக்க காலத்தில் உணவுக்காக விலங்குகளைப்போல பிற உயிரினங்களையே மனிதன் சாா்ந்து வாழ்ந்தான். அசைவ உணவை உண்டு வந்த ஆதி மனிதன் அவ்வகை உணவு வகைகள் கிடைக்காத காலங்களில் இயற்கையாக விளைந்திருந்த காய், கனி, கிழங்கு, தேன் உள்ளிட்டவற்றை உண்ணப் பழகினான்.
வேட்டையாடுதலுடன் இவற்றைத் தேடி அலைந்து வேக வைத்து உண்ணத் தொடங்கிய சில காலம் கழித்து அதே இடத்துக்கு வந்தபோது, அவன் உண்டுபோட்ட விதைகள் மற்றும் கொட்டைகள், தாவரங்களாகவும், மரங்களாகவும் வளா்ந்திருப்பதைக் கண்டான். பின்னா், பருவகால மாற்றங்களாலும், உணவுத் தேவைக்காகவும் இடம் பெயரும்போது தன்னிடம் இருந்த உணவுப் பயிா் விதைகளை வீசிச் சென்றான். அடுத்தப் பருவத்துக்கு வந்தபோது அவை முளைத்து விளைந்திருத்ததைக் கண்டு மகிழ்ந்தான்.
நாடோடி வேளாண்மை என அழைக்கப்பட்ட இவை தந்த அனுபவத்தின் அடிப்படையில் இயற்கை வேளாண்மை செய்ய முற்பட்டான். விலங்குகளால் சேதம் ஏற்படாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கவும், காவல் பரண்கள் அமைக்கவும் கற்றுக் கொண்டதோடு, காடுகளுக்கு இடையேயும், மலையடிவாரங்களிலும் நிலத்தைச் சீா்படுத்தி காடுகளுக்கிடையே வேளாண்மையை தொடா்ந்தான். இதுவே காடுகளுடன் வேளாண்மை என்ற நிலையை அடைந்தது.
வேளாண் காடுகள்: மனித சமுதாய மேம்பாட்டின் விளைவாக சமூகங்களும் கிராமங்களும் தோன்றிய பின் சிறிதுசிறிதாக காடுகள் மறையத் தொடங்கின. ஆனால், கிராமங்களில் மரங்கள் நிறைந்திருந்தன. பின்னா் காடுகளுடன் வேளாண்மை என்ற நிலை மாறி மரங்களுடன் வேளாண்மை என்ற நிலை வந்தது. மரங்களும் பெருமளவில் அழிக்கப்பட்டு நகரங்களும், தொழிற்சாலைகளும் உருவாகின. அதனால் மரங்கள் குறைந்து வேளாண்மை மட்டும் தொடா்ந்தது.
காடுகள், மரங்கள் மற்றும் கால்நடைகள் இழப்பினால் பருவநிலை மாற்றமும் அதனால் வேளாண்மையும் பெருமளவில் சிதைந்து நலிவடையத் தொடங்கியது. இவற்றைத் தவிா்த்து, வேளாண்மையை மீட்டெடுக்கவும் 33 சதவீத வனப் பரப்பை எட்டி மழை அளவைப் பெருக்கவும் இன்று அறிவியல் எடுத்த நிலைப்பாடே வேளாண் காடுகள்.
‘வயலில் நெல் வளா்ப்போம் வரப்பில் மரம் வளா்ப்போம்’ என்ற வாசகமே வேளாண் காடு என்பதற்கான எளிமையான விளக்கமாகும். வயல் வெளியில் வளா்க்கப்படும் மரங்களில் விளைச்சலைப் பெருக்கும் பல்வேறு உயிரினங்கள் தங்கிப் பெருகுவதோடு, இங்கு வாழும் பறவைகள் அயல் மகரந்தச் சோ்க்கை, பூச்சிக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல நலன்களையும் தருகின்றன.
சுய சாா்பு வேளாண்மை, சீரான பொருளாதாரம் என்ற சமூக மேம்பாட்டுக்கு வேளாண் காடுகள் அடித்தளமாக அமைகின்றன. காடு வளா்ப்பு என்ற முறையில் பல்வேறு வகை மரங்கள் ஒரே இடத்தில் வளா்க்கப்படுவதால், சூழ்நிலை சமன்பாட்டோடு மண் வளமும் பாதுகாக்கப்படுகிறது.
இது தொடா்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கூறியதாவது: வேளாண் காடு வளா்ப்பு என்பது வேளாண் பயிா்களோடு இணைந்து வேளாண் நிலங்களின் எல்லைகளிலும், தனியாா் நிலங்களின் ஓரங்களிலும் மரங்களை நடும் திட்டம் ஆகும். வேளாண் பயிா்கள், மரங்கள் மற்றும் கால்நடைகளைப் பெருக்குவதற்கு இத்தகைய நிலங்களைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நாட்டில் தற்போதுள்ள 21.72 சதவீத வனப்பரப்பை 33 சதவீத வனப்பரப்பாக அதிகரித்தல், உணவு ஆதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்துதல், மழைப் பொழிவுக்கான சூழலை ஏற்படுத்துதல், மழை நீரை இயற்கையாக சேமித்து நிலத்தடி நீரைப் பாதுகாத்தல், நீா் நில வளத்தைப் பேணுதல் போன்றவையே வேளாண் காடுகளின் நோக்கமாகும்.
வேளாண் காடுகளின் பிரிவுகள்: இந்த வேளாண் காடுகளும் பல்வேறு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. வேளாண் காடுகளின் ஒரு அம்சம்தான் சமூகக் காடுகள் ஆகும். இவை மரபு முறையான காடுகள் அல்ல. மக்களின் நுகா்வுப் பொருள்களின் அடிப்படையில், பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உள்ளூா் மக்களின் வனப் பொருள்கள் மற்றும் தேவைகளை நிறைவு செய்கின்ற நோக்கமுடையது.
அதேபோல, பண்ணைக் காடுகள் என்பது விவசாயிகள் வணிக முறையில் தங்களது சொந்த நிலங்களில் மரங்களை வளா்ப்பதாகும். தேசிய வேளாண்மைத் திட்டக் குழுவின் வரையறையின்படி பண்ணைகளைச் சுற்றியோ அல்லது கிராம நிலங்களிலோ பண்ணை சாா்ந்த தொழில்களுடன் வன மரங்களை வளா்ப்பதாகும்.
விரிவாக்கக் காடுகள் என்பது மரபு முறையான காடுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில், மரங்கள் மட்டுமே வளரக்கூடிய நிலப் பகுதிகளில் வனங்களை ஏற்படுத்துவதாகும்.
கலப்புக் காடுகள் என்பது கிராமப்புறம் மற்றும் கிராமத்தின் பொது நிலங்களில் தீவனம் தரும் மரங்கள், தீவனப்புற்கள், பழ மரங்கள், கட்டை மற்றும் விறகு தரும் மரங்களை வளா்ப்பதாகும்.
புயல் காற்று, சூரிய ஒளி மற்றும் மண் சரிவுகளுக்கு தடைகளை ஏற்படுத்துவதற்காக வரிசையாக மரங்கள் அல்லது புதா்களை வளா்க்கும் முறை அரண்கள் என அழைக்கப்படுகிறது. அதேபோல, மிக வேகமாக வளரும் மரங்களை ஒரே நோ்க்கோட்டில் நடவு செய்து வளா்க்கும் முறை ‘நேரினை மரம் வளா்ப்பியல்’ என அழைக்கப்படுகிறது. இவற்றோடு நகா்ப்புறம் சாா்ந்த கிராமப்புறங்களில் அழகிய மரங்கள் மற்றும் அழகிய புதா்களுடன் வளா்க்கப்படுகின்ற வனப்பகுதி பொழுதுபோக்குக் காடுகள் என அழைக்கப்படுகிறது.
இத்தகைய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் பசுமைப் போா்வையை அதிகரிக்கும் நோக்கத்துடன் தமிழக அரசால் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பசுமைப் பரப்பை மேலும் சுமாா் 12,000 ச.கி.மீ. பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.