கோவை டு பீகார்; ஐ.டி ஊழியருக்காக கடத்திவரப்பட்ட துப்பாக்கி... 3 பேர் கைது!
கோவை, சேரன்மாநகர் விளாங்குறிச்சி சாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்ட பிரபு (22). இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஶ்ரீ (23) நண்பர்கள் ஆவர்.
மணிகண்ட பிரபு தனக்கு துப்பாக்கி வேண்டும் என்று ஹரியிடம் கேட்டுள்ளார். இது குறித்து ஹரி பீகாரைச் சேர்ந்த தன் நண்பர் குந்தன்ராய் (23) என்பவரை அணுகியுள்ளார்.
குந்தன்ராய் பீகாரில் ஒரு இடத்தைச் சொல்லி அங்கு சென்றால் துப்பாக்கி கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். இதையடுத்து ஹரிஶ்ரீ மற்றும் குந்தன்ராய் ரயிலில் பீகார் சென்று துப்பாக்கி வாங்கி கோவை திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல்துறை நடத்திய சோதனையில் அவர்கள் கையும், களவுமாக பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கள்ள துப்பாக்கி மற்றும் ஆறு தோட்டக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மணிகண்ட பிரபு, ஹரிஶ்ரீ மற்றும் குந்தன்ராய் ஆகிய மூன்று பேரை கைது செய்து, அவர்கள் எதற்காக துப்பாக்கி வாங்கினார்கள்.
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.