பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்
களியக்காவிளை: கேரளா கழிவுகளை எல்லையில் தடுத்து நிறுத்திய தமிழக போலீஸ்!
திருநெல்வேலி மாவட்டத்தின் நடுக்கல்லூர், பழவூர், கொண்டா நகரம் கிராமப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டதால் அந்தப் பகுதி மக்களுக்கு நோய் தொற்றும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதுடன், ``கழிவுகள் கொட்டப்பட்டதற்கு கேரள அரசுதான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். மூன்று நாள்களுக்குள் மருத்துவக் கழிவுகளைக் கேரள அரசாங்கம் அகற்ற வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கேரளா அரசுக்கு ஒரு கடிதம் எழுதினர். அதில் கழிவுகளைத் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிய மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகளை லாரிகளில் கேரளாவுக்கே திருப்பி அனுப்பும் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. கேரளா எல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக போலீஸார் லஞ்சம் வாங்கிக்கொண்டு கழிவுகளை தமிழ்நாட்டுக்குள் அனுமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை உட்பட சோதனை சாவடிகளை தாண்டி கழிவு வாகனங்கள் தமிழகத்தில் நுழைந்தால் காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று மூன்று கன்டெய்னர் லாரிகளில் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்ட இறைச்சி கழிவுகள் பறிமுதல் செய்யபட்டு இரண்டு ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று கேரளாவில் இருந்து புழுக்களுடன் கூடிய ஹோட்டல் வேஸ்ட்களை ஏற்றி வந்த தமிழக பதிவெண் கொண்ட கன்டெய்னர் லாரி மற்றும் செப்டிக் டேங்க் வேஸ்ட் ஏற்றி வந்த வாகனம் என இரண்டு வாகனங்களை கன்னியாகுமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். கழிவுகளுடன் வந்த இரண்டு வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். வாகனங்களை ஓட்டி வந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்ட தேவா (25) வள்ளி முருகன் (43) ஆகிய இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.