ஒவ்வொரு குடிமகனையும் காப்பது அரசின் கடமை: கிறிஸ்துமஸ் விழாவில் பிரதமர்!
விவாகரத்துதான் தீர்வு? -சிரியா முன்னாள் அதிபரின் மனைவி
சிரியாவைவிட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சமடைந்துள்ள அந்நாட்டின் முன்னாள் அதிபரின் மனைவி விவாகரத்து கோரியுள்ளார்.
சிரியா முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத்தின் மனைவி அஸ்மா அல் அசாத், ரஷிய நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். விவாகரத்து கிடைத்தபின் அவர் மாஸ்கோவிலிருந்து லண்டனுக்கு குடிபெயரவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் சிரியா மட்டுமல்லாது பிரிட்டன் குடியுரிமையையும் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிரியாவை பூர்வீகமாகக் கொண்ட இவரது பெற்றோர் லண்டனில் வசித்து வந்த நிலையில், இவர் தனது இளமைப் பருவத்தை லண்டனில் கழித்தவர். அங்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, லண்டனில் கல்வி பயில வந்த பஷார் அல் அசாத்துடன் காதல் வசப்பட்ட இவர், கடந்த 2000-ஆம் ஆண்டு தனது 25-ஆம் வயதில் பஷார் அல் அசாத்தை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வாரிசுகள் உள்ளனர்.
இந்த நிலையில், மாஸ்கோவில் தன்னால் வாழப் பிடிக்கவில்லை என்பதால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், கடந்த மே மாதம் ரத்த தட்டணுக்கள் உறைதல் பிரச்சினைக்காகவும் சிகிச்சை எடுத்துக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தனது சிறு வயது பருவத்தை லண்டனில் கழித்த அவர், மீண்டும் அங்கே செல்ல இப்போது ஆயத்தமாகி வருகிறார்.
இந்த தகவலை முற்றிலும் நிராகரித்துள்ளது ரஷிய அரசு. அந்நாட்டின் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், “அப்படியெதுவுமில்லை, இந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை” எனத் தெரிவித்துள்ளார்.