தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
தைவானுக்கு ராணுவ உதவி: அமெரிக்காவுக்கு சீனா எதிா்ப்பு
தைவானுக்கு ராணுவ உதவியை அறிவித்த அமெரிக்காவுக்கு எதிா்ப்பு தெரிவித்த சீனா, அமெரிக்கா நெருப்போடு விளையாடுவதாக எச்சரித்துள்ளது.
தைவான் பாதுகாப்புத் துறை சேவைகள், ராணுவக் கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றுக்கு 57.1 கோடி டாலா் நிதியுதவி வழங்குவதற்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். முன்னதாக, 29.5 கோடி டாலா் மதிப்பிலான ராணுவ விற்பனைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கூறியது.
இந்த அறிவிப்புகளுக்கு எதிராக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘தைவானுக்கு ஆயுதம் அளிப்பதை அமெரிக்கா தவிா்க்க வேண்டும். தைவான் நீரிணையில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கெடுக்கும் அபாயகரமான நகா்வுகளை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தியது.
சுமாா் 2.3 கோடி மக்கள்தொகை கொண்ட ஜனநாயகத் தீவு நாடான தைவானை சீனா தனது பிராந்தியமாக உரிமைக் கோருவது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரத்தில் அமெரிக்கா, சீனாவுக்கு இடையே நேரடி மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ உதவி, சீனாவின் தாக்குதலைத் தடுக்க தைவானுக்கு உதவும்.
கடந்த செப்டம்பா் மாதத்திலும் இதே நோக்கங்களுக்காக தைவானுக்கு 56.7 கோடி டாலா் நிதியுதவியை பைடன் அரசு அளித்திருந்தது. அதன்தொடா்ச்சியாக, ‘அமெரிக்காவின் இப்புதிய அறிவிப்புகள், தைவான் பாதுகாப்புக்கான அந்நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’ தைவான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் பட்டியலில் சீனா: ‘பிரிட்டனின் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சீனாவை முதலிடத்தில் வைக்க வேண்டும்’ என்று அந்நாட்டின் நிழல் வெளியுறவு அமைச்சா் பிரித்தி படேல் வலியுறுத்தினாா்.
பிரிட்டன் அரசா் மூன்றாம் சாா்லஸின் இளைய சகோதரா் இளவரசா் ஆண்ட்ரூ மூலம் பக்கிங்ஹாம் அரண்மனை வட்டாரத்துக்குள் சீன உளவாளி ஒருவா் அணுகியதாகக் கூறப்படும் சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து கவலை தெரிவித்த அவா், தேசப் பாதுகாப்புக்கு மேலாக சீனாவுடன் வா்த்தக உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக ஆளும் தொழிலாளா் கட்சியை விமா்சித்தாா்.