Doctor Vikatan: மலம் கழிக்கும்போது ரத்தம்... புற்றுநோய் அறிகுறியாக இருக்குமா?
Doctor Vikatan: என் கணவருக்கு மாதத்தில் பல நாள்கள் வயிற்றுக்கோளாறுகள் இருப்பதாகச் சொல்கிறார். பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு என ஏதேனும் ஒரு பிரச்னை மாறி மாறி வருகிறது. அவருக்கு சிகரெட் பழக்கம் உண்டு. தினமும் சிகரெட் பிடித்தால்தான் மலம் கழிக்க முடியும் என்ற நிலை... தவிர, சமீபகாலமாக மலம் கழிக்கும்போது அடிக்கடி ரத்தம் சேர்ந்து வெளியேறுவதாகச் சொல்கிறார். இது புற்றுநோயின் அறிகுறியாக இருக்குமா என பயமாக இருக்கிறது. இது குறித்து விளக்க முடியுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, வயிறு, குடல், இரைப்பை அறுவைசிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா.
சிகரெட் புகைத்தால்தான் மலம் கழிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் பலரை பார்க்கலாம். அது அவர்களது மனம் சம்பந்தப்பட்டதுதானே தவிர, சிகரெட்டுக்கும், மலம் கழிப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
வேளா வேளைக்கு, சத்தான, சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவோருக்கு குடல், இரைப்பை தொடர்பான பிரச்னைகள் வராது. அந்த ஒழுக்கம் மீறப்படும்போதுதான் செரிமான பாதிப்புகள் வருகின்றன. பசியின்மை, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயு வெளியேறுவது, வயிற்றுப்போக்கு என செரிமானம் தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியப்படுத்தக்கூடாது. உணவுக்குழாய் தொடர்பான புற்றுநோய்க்கு பிரதான காரணமே முறையற்ற உணவுப்பழக்கம்தான். வருடக்கணக்கில் உப்பிலும் எண்ணெயிலும் ஊறும் ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகள் போன்றவை நிச்சயம் குடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புடன் வரும் நபர்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருக்கிறது. மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறுவது இதன் அறிகுறியாக இருக்கலாம். ஆண்களைவிட பெண்களுக்கு மலச்சிக்கல் பாதிப்பு அதிகம். மலச்சிக்கல் காரணமாக ஆசனவாயில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் கசிவது சாதாரணம். மலச்சிக்கல் இல்லாமல் சிலருக்கு இப்படி ரத்தப்போக்கு இருந்தால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவரை அணுகினால், அவர் கொலனோஸ்கோப்பி என்ற பரிசோதனையின் மூலம் நோய் பாதிப்பை உறுதிசெய்வார். சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்.
வயிறு தொடர்பான எந்த அறிகுறியையும் அலட்சியத்தோடு கடந்துவிடக்கூடாது. இந்தப் பிரச்னைகளால் உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகும். மெள்ள மெள்ள செரிமான மண்டல செயல்பாடுகள் பாதிப்புக்குள்ளாகும். எனவே, முதல் வேலையாக உங்கள் கணவரை குடல், இரைப்பை மருத்துவரிடம் அழைத்துச்சென்று ஆலோசனை பெறுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.