மஸ்ஜித் - கோயில் விவகாரம்: ``இந்துக்களின் தலைவராகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்" - மோகன் பகவத்
"விஸ்வகுரு பாரத்" கருப்பொருளில் விரிவுரைத் தொடர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்தது. இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது, ``சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. நாம் இந்துக்கள் என்பதால் இதை நாம்மால் மட்டுமே செய்ய முடியும். இந்தியாவில் நீண்ட காலமாக நாம் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நல்லிணக்கத்தை உலகிற்கு வழங்க வேண்டுமானால், அதற்கான முன்மாதிரியை நாம் உருவாக்க வேண்டும். ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, புதிய புதிய இடங்களில் அதேப்போன்ற பிரச்னைகளைக் கிளப்புகின்றனர்.
அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது, அது அனைத்து இந்துக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம் என்பதால், அதில் அரசியல் உள்நோக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு நாளும் அதேப் போன்ற ஒரு புதிய விவகாரம் சர்ச்சையாக்கப்படுகிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? நாம் ஒன்றாக ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இந்தியாவால்தான் உலகுக்கு காண்பிக்க முடியும். எனவே, இந்தியர்களாகிய நாம் முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் நாட்டை உலகிற்கு முன்மாதிரியாக மாற்றுவதற்கு உழைக்க வேண்டும்.
சில வெளி குழுக்கள் பழைய ஆட்சி முறையை மீட்டெடுக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் இப்போது நாடு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்குகிறது. இந்த அமைப்பில், மக்கள் அரசை நடத்தும் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்கிறார்கள். அதனால் மேலாதிக்கம் செய்த நாள்கள் போய்விட்டன. ஔரங்கசீப்பின் வழித்தோன்றல் பகதூர் ஷா ஜாஃபர் 1857-ல் பசுக்கொலையைத் தடை செய்தார். அயோத்தியில் ராமர் கோவில் இந்துக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால் ஆங்கிலேயர்கள் அதை உணர்ந்து இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கினர். அப்போதிருந்து, இந்தப் பிரிவினைவாத உணர்வு தோன்றியது. இங்கு யார் சிறுபான்மையினர், யார் பெரும்பான்மையினர்? இங்கு அனைவரும் சமம். இந்த தேசத்தின் பாரம்பரியம் என்னவென்றால், அனைவரும் அவரவர் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றலாம். விதிகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே ஒரே தேவை" என்றார்.