தென்காசி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு
`பொய் நெல்லைக் குத்திப் பொங்கல் வைக்க முடியாது!' - எடப்பாடி பழனிசாமியைச் சாடிய ஸ்டாலின்
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் ஒரு பகுதியாக ஈரோடு சோலார் புதிய பேருந்து நிலையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகெண்டார். ரூ.951 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும், ரூ.133 கோடியில் 222 புதிய பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஈரோடு மண் தமிழகத்தில் புதிய வரலாற்றின் தொடக்கமாக இருக்க காரணம் பெரியார். தந்தை பெரியார் போட்ட அடித்தளம் காரணமாக கேரள மக்கள் திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகின்றனர். கடந்த ஆட்சியாளர்களுக்கு தற்போதைய அரசின் வெற்றிகளை தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புலம்புகிறார். திமுக அரசு மீது குற்றம்சாட்ட எதுவும் இல்லாமல் பொய் சொல்கிறார். இது அவருடைய பதவிக்கு அழகல்ல. தொடர் திட்டங்களை தருவதால் அரசுக்கு மக்கள் ஆதரவு கொடுத்துக்கொண்டிருக்கின்றனர். இதனை கடந்த ஆட்சியாளர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைப்பதால் வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புலம்பிக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சியை நியாயமான குறை இருந்தால் விமர்சிப்பது தவறில்லை. ஆனால், திமுக அரசின் மீது அடிப்படை இல்லாமல் புகார் சொல்லக் கூடாது. இது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல.
ஃபெஞ்சல் புயலுக்கு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பல லட்சம் உயிர்களைக் காப்பாற்றியுள்ளோம். மத்திய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் மாநில அரசே அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத எடப்பாடி பழனிசாமி கற்பனை குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். முன்னெச்சரிக்கை இல்லாமல் சாத்தனூர் அணையை திறந்ததாக எடப்பாடி பழனிசாமி பொய்யை பரப்பினார். ஆனால், ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உயிரிழப்புகளை தவிர்த்துள்ளோம், இதுதான் உண்மை.
அதிமுக ஆட்சியில் முன்னறிவிப்பு இல்லாமல் செம்பரம்பாக்கம் அணை திறந்து 200-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அப்போது அமைச்சர்கள் களத்திற்கு செல்லாமல் தன்னார்வலர்கள் தான் உதவி செய்தனர். செம்பரம்பாக்கம் அணை திறந்து சென்னையை மூழ்கடித்தது மனிதனால் உண்டாக்கப்பட்ட பேரழிவு. சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிசாமி பொய் பேசிக்கொண்டிருக்கிறார். இதனைச் சட்டமன்றத்தில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளோம். இதனால், தற்போது டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏலத்திற்கு விட்ட ஒன்றிய அரசை கண்டிக்காமல் மாநில அரசை குறை கூறிவருகிறார் பழனிசாமி.
இதற்கு அமைச்சர்கள் பதிலளித்தும் சட்டமன்றத்தில் வாழைப்பழ காமெடி போல் சொன்னதை திரும்ப திரும்பச் சொன்னார். காலி குடம் உருண்டால் சத்தம் அதிகமாக வரும் அதுபோல் எடப்பாடி பழனிசாமி உருண்டு புரண்டு சத்தம்போட்டாலும் அதில் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது. நான்கு வருட ஆட்சியில் இருந்து பதவி சுகத்திற்காக பலருக்கு துரோகம் செய்து தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தது அதிமுக தான். என் மக்களுக்கு தெரியும். மாநில அரசை பார்த்து கத்தி பேசும் எதிர்க்கட்சியினருக்கு ஒன்றிய அரசை கீச்சுக்குரலில் பேச பயம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு மண்டல மக்கள் கொடுத்த வெற்றி மகத்தானது. மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்" என்றார்.