Ambedkar: ``அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது; அமித் ஷா அதை..." - பா.ரஞ்சித்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்." என்று நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது.
அமித் ஷாவின் இத்தகைய பேச்சுக்கு, ``சாவர்க்கரின் வாரிசுகளுக்கு அம்பேத்கரின் பெயர் எரிச்சலைத்தான் தரும்." என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்யும் அதேவேளையில், ``கடவுள் பெயரைச் சொன்னால் சொர்க்கம் என்றால், அம்பேத்கரை என்னவென்று சொல்ல வருகிறீர்கள். இந்த அவமதிப்புக்கு மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும்." என்றும் கண்டனத்தோடு வலியுறுத்திவருகின்றனர்.
அரசியல் தலைவர்களைத் தாண்டி, இயக்குநர் வெற்றிமாறன் போன்ற பிரபலங்களும், ``அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது." என்று கூறிவருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் பா.ரஞ்சித், ``பாபா சாகேப் அம்பேத்கரை யாராலும், வெறுக்கவும், ஒதுக்கவும், புறந்தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவைக் கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும், மற்ற கட்சியினரும் புரிந்துகொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
அம்பேத்கர் பெயருக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய பவரை (Power) அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இன்றைய நவீன இந்தியாவில் அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டு நமக்குள் இருக்கின்ற பிரச்னைகளை சரி செய்ய வேண்டிய நேரம் இது. அம்பேத்கரைப் பின்பற்றுகிறேன் என்பதில் பெருமையாக உணர்கிறேன்." என்று செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.