`அம்பேத்கர்... அம்பேத்கர் என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்புவோம்!' - அமித் ஷாவைக் கண்டித்த திருமா
காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கி, அந்தப் பகுதிகளைப் பார்வையிட... இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிளில் வெற்றி பெறுவோம் என திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற செயற்குழுவில் 200 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாக இருக்க வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரையில் தி.மு.க கூட்டணியில் வலுவாக இருக்கிறது. தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டில் பல இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பது உறுதி. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஒரே அணியிலே திரள்வார்கள் என்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை. வேல்முருகன் தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் நீடிப்பார் என்று நான் நம்புகிறேன். நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பாரதிய ஜனதா தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அது வெற்றிகரமாக அமையாது என்பதை கடந்த தேர்தலில் மக்கள் உணர்த்தி உள்ளனர். பத்திரப்பதிவு துறையில் கட்டணம் உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள், சிறுபான்மையினருக்கு எப்போதும் தி.மு.க கூட்டணி உறுதுணையாக இருக்கும். அதேபோல், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால், சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தவறானது ஆகும். அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதை கண்டித்து இந்தியா முழுவதும் வரும் 28-ஆம் தேதி அம்பேத்கர் அமைப்புகள், பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக, சென்னையில் வரும் 28-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அம்பேத்கர் அம்பேத்கர் என்று ஆயிரம் முறை முழக்கங்கள் எழுப்பப்படும். தமிழ்நாட்டில் முற்றிலுமாக போதைப்பொருள்கள் ஒழிக்கப்பட்ட வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்” எனத் தெரிவித்தார்.