Health: வயிறு உப்புசம் முதல் டீடாக்ஸ் வரை... வெற்றிலையின் பலன்கள்!
நம் ஊரில் விளையும் கும்பகோணம் வெற்றிலை உலகப் புகழ்பெற்றது. கறுப்பு நிறத்தில் அதிகக் காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை; கற்பூர வாசனையுடன் சிறிது காரமாக இருப்பது கற்பூர வெற்றிலை; மிகுந்த மணத்துடன் காரம் அவ்வளவாக இல்லாமல் ஓரளவு வெளிர் நிறத்தில் இருப்பது சாதாரண வெற்றிலை. சித்த மருத்துவர்கள் சொர்ணமரியம்மாள், லோகமணியன் வெற்றிலையின் மருத்துவக் குணங்களை இங்கே சொல்கிறார்கள்.
வெற்றிலையில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் (Essential oil) பசியைத் தூண்டுவதுடன், செரிமானத்தையும் துரிதப்படுத்தும். டைஃபாய்டு, காலரா போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் வெற்றிலைக்கு உண்டு.
நவீன ஆய்வின்படி, வெற்றிலையில் உள்ள ஹைட்ராக்ஸி சவிகல் (Hydroxychavicol), குளோரோஜெனிக் ஆசிட் (Chlorogenic acid) போன்ற வேதிப் பொருள்கள் புற்றுநோய் எதிர்ப்புப் பொருள்களாகச் செயல்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.
குழந்தைகள் சரியாகப் பால் குடிக்காத நிலையில், பிரசவித்தப் பெண்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு வீக்கமும் வலியும் இருக்கும். வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டிவர வீக்கமும் வலியும் குறையும். அதே சமயம், வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, மார்பில் வைத்துக் கட்டினால் அதிக பால் சுரக்கும்.
சிறு குழந்தைகளுக்குப் பால் மற்றும் பால் பொருள்களால் செரிமானக்கோளாறு ஏற்படும். பத்து வெற்றிலைக் காம்பு, ஒரு வசம்பு, கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் ஓமம், இரண்டு பூண்டு பல், இரண்டு கிராம்பு ஆகியவற்றை மண் சட்டியில் கருக வறுத்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு பாலாடை ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சவும். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, செரிமானக்கோளாறு நீங்கும்.
பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.
வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட நுரையீரல் நோய்கள் குணமாகும்.
அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் ஐந்து வெற்றிலைகளைப் போட்டுக் கொதிக்கவிட்டு, வெற்றிலை நன்றாகச் சிவந்ததும் எண்ணெயை வடிகட்டி பாட்டிலில் பத்திரப்படுத்தி, சொரி, சிரங்கு, படைகளின் மீது தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.
இரவில் படுக்கப்போகும்போது வெற்றிலையில் சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் தடவி, தணலில் காட்டி கட்டிகளின்மீது வைத்துக் கட்டினால், கட்டி உடைந்து சீழ் வெளிவரும்.
வெற்றிலைச் சாறுடன் சிறிது தண்ணீர் மற்றும் பாலைச் சேர்த்து அருந்திவர, சிறுநீர் நன்றாகப் பிரியும்.
கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும். சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்.
வாயில் உள்ள உமிழ்நீருடன் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் ஒன்று சேரும்போது, வாய் மற்றும் உதடுகளில் சிவப்பு நிறம் படியும். ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு எனச் சாப்பிட்ட பிறகு மட்டுமே தாம்பூலம் போட வேண்டும். அப்படிப் போடும்போது முதலில் ஒன்றிரண்டு வெறும் வெற்றிலையை மென்று, பின் பாக்கை மென்று... அதன் பிறகு சுண்ணாம்பு தடவிய வெற்றிலையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மெல்லும்போது முதலில் வரும் சாறை வெளியே உமிழ்ந்துவிட வேண்டும். பின்னர், மெல்லும்போது இரண்டு முதல் ஐந்து முறை வரும் சாறை உட்கொண்டதும், சக்கையைக் கீழே துப்பி வாயைக் கொப்பளிக்க வேண்டும். வெற்றிலையோடு பாக்கு, சுண்ணாம்பு மட்டுமின்றி சுக்கு, கிராம்பு போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். வெற்றிலையில் உள்ள காம்பு, நடுநரம்பு, நுனிப்பகுதி போன்றவை செரிக்க நேரமாகும் என்பதால், அவற்றை நீக்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதேபோல், கொழுந்து வெற்றிலைதான் தாம்பூலத்துக்கு ஏற்றது. ம்ம்ம்... வெற்றிலை போடுவதும் ஒரு கலைதான்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...