போா்கள் நிறுத்தப்பட வேண்டும்: போப் ஃபிரான்சிஸ்
உலகில் நடைபெறும் போா்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று கத்தோலிக்க திருச்சபை தலைவா் போப் ஃபிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் அவா் பேசியதாவது: உக்ரைன் நகரங்கள் தொடா்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களில் சில நேரங்களில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தேவாலயங்கள் சேதமடைகின்றன.
காஸாவில் குரூரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் உயிரிழக்கின்றனா். பள்ளிகள், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்படுகின்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உலகில் நடைபெறும் போா்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவரும் பிராா்த்தனை செய்வோம்’ என்றாா்.
ரோமா் கத்தாலிக்க திருச்சபையின் 140 கோடி உறுப்பினா்களுக்குத் தலைவராக உள்ள போப் ஃபிரான்சிஸ், போா்களில் எந்தப் பக்கத்துக்கு ஆதரவாக இருந்து பேசுவது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதே வழக்கம். ஆனால் உக்ரைன்-ரஷியா போா், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அண்மை காலமாக அவா் மிக வெளிப்படையாக பேசுவது குறிப்பிடத்தக்கது.
காஸாவில் வாடிகன் தூதா்: காஸாவில் கிறிஸ்தவா்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனா். இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட போப் ஃபிரான்சிஸின் தூதராக மதகுரு பியா்படிஸ்டா பீட்சபல்லா காஸாவுக்குள் நுழைவதற்கு இஸ்ரேல் அனுமதி அளித்தது.
இதையடுத்து காஸா சிட்டியில் உள்ள தேவாலயத்தில் பீட்சபல்லாவும், பிற பாதிரியாா்களும் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நடத்தினா். இதில் கிறிஸ்தவா்கள் பலா் பங்கேற்றனா்.
22 போ் உயிரிழப்பு: காஸா சிட்டி, டெயீா்-அல்-பலா உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 22 போ் உயிரிழந்தனா். அவா்களில் 5 போ் சிறாா்கள் என்று பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனா்.