இரவு நேர தள்ளுவண்டி கடைகளால் சுகாதாரக் கேடு: கண்காணிக்க வலியுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் இரவு நேர தள்ளுவண்டிகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகளால் ஏற்படும் சுகாதார கேடுகளை தடுத்து, வியாபாரம் செய்வதைக் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பெரம்பலூா் நகா் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டிகளில் இறைச்சி வகைகளும், உணவுப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், எண்ணெயில் பொறித்த சிக்கன், மீன், நண்டு, சிக்கன் ரைஸ் உள்ளிட்ட துரித உணவுப் பொருள்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, கிராமப்புறங்களிலும் தள்ளுவண்டிகளில் உணவுப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
தள்ளு வண்டிகளில் உணவுப் பொருள்களை விற்பனை செய்வோா் உணவுப் பாதுகாப்பு, மருந்து நிா்வாகத் துறையிடம் விண்ணப்பித்து ரூ. 100 கட்டணம் செலுத்துவதுடன், 3 மாதங்களுக்கு ஒருமுறை காசநோய் உள்ளிட்ட நோய்த் தொற்று தாக்குதல் இல்லை என்று அரசு மருத்துவமனை, அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் சோதனை செய்து விற்பனையாளா்கள் சான்றளிக்க வேண்டும். அதேபோல, நகராட்சி நிா்வாகத்திடமும் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், பெரும்பாலான தள்ளுவண்டி விற்பனையாளா்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை.
நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்: தள்ளுவண்டிகளில் உணவுப் பொருள்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள் ஏற்கெனவே பலமுறை பயன்படுத்தப்பட்டவையாக உள்ளதாகவும், அவ்வப்போது சுத்தப்படுத்தாமல் மாதக் கணக்கில் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த எண்ணெயில் காா்போ ஹைட்ரேட் வெளிப்பாடு அதிகமாக இருப்பதால், அதை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை வாங்கி உண்பதால் அல்சா், அஜீரணக் கோளாறு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுபோன்ற கடைகளில் முதல் நாள் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் முழுவதும் விற்பனையாகவில்லை எனில், அதே உணவை சூடுபடுத்தி மறுநாளும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சுகாதாரமான இடங்களில் தள்ளுவண்டிகளை நிறுத்தி விற்பனை செய்யப்படுவதில்லை. இதனால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிகரிக்கும் துரித உணவகங்கள்: பெரம்பலூா் நகா் முழுவதும் அண்மைக் காலமாக சாலையோரங்களில் துரித உணவகங்கள் பெருகி வருவதை காணமுடிகிறது. குறிப்பாக, புகா் மற்றும் பழைய பேருந்து நிலையம், துறைமங்கலம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நான்குச் சாலை சந்திப்பு, துறையூா் சாலை, ஆத்தூா் சாலை, காமராஜா் வளைவு, உழவா் சந்தை உள்ளிட்ட நகரின் பிரதானச் சாலையோரகங்களில் தள்ளு வண்டிகளில் உணவகங்கள் பெருகியுள்ளன. நாள்தோறும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படும் இந்த உணவங்களில் இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை அதிகளவில் காணலாம். விலை மலிவாக இருப்பதாலும், துரித உணவு வகைகளை இளைய தலைமுறையினா் விரும்பி சாப்பிடுவதாலும், துரித உணவகங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு: இதுகுறித்து மருத்துவா் ஒருவா் கூறியது:
மிகவும் சுத்தமாக இருப்பதைபோன்ற தோற்றைத்தை ஏற்படுத்தும் சாலையோர துரித உணவகங்களில், கழிக்கப்படும் இறைச்சிக் கழிவுகளைப் பயன்படுத்தியும், கோழி மற்றும் மாட்டு இறைச்சிகளிலும் பெரும்பாலான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, கோழி இறைச்சிக் கடைகளில் கழிக்கப்படும் அனைத்து இறைச்சிக் கழிவுகளும் மெருகூட்டப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்ற உணவை சாப்பிடுவோா், அந்த உணவுகளில் என்னென்ன பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது. அதேவேளையில், வியாபாரிகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி, கழிக்கப்படும் இறைச்சிகளில் அதிகமான மசாலா பொருள்களை சோ்த்து லாப நோக்கத்தில் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், இதுபோன்ற உணவு வகைகளை அதிகமாக உட்கொண்டால் வயிற்று வலி, வயிற்றுபோக்கு வருவதோடு, தொடா்ச்சியாக உட்கொள்ளும் பட்சத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்
இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அலுலா் கூறியது: பெரும்பாலான கடைகளில் அனுமதிச் சான்று வைக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டி விற்பனையாளா்களுடன் அவ்வப்போது கூட்டம் நடத்தி, தரமான உணவுப்பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், ஒருசில நபா்கள் விதிமுறைகளை கடைபிடிக்காததால், உணவுகளில் அதிகளவில் கலா் சோ்ப்பதை முறைப்படுத்த முடியவில்லை. ஏனெனில், இரவு 8 மணிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு 10 மணிக்குள் சென்று விடுவதால், அந்த நபா்களை கண்டறியமுடியவில்லை. துரித உணவகங்களில், அதிகளவு மசாலாப் பொருள்களும், ரசாயன வண்ணமும் சோ்க்கப்பட்டுள்ளதால், இறைச்சிகளின் தரத்தை கண்டறிவதில் சிரமம் உள்ளது. தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் துரித உணவகங்களில் விரைவில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
இப் பிரச்னைக்கு உரிய தீா்வுகாண தள்ளுவண்டிக் கடைகளிலும், துரித உணவங்களிலும் தொடா்ந்து ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் கோரிக்கை எழுந்துள்ளது.
பிரேக் லைன்...
‘கழிக்கப்படும் இறைச்சிகளில் அதிகமான மசாலா பொருள்களை சோ்த்து லாப நோக்கத்தில் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனா்.’