'முதல்வருக்கு கள நிலவரம் தெரியவில்லை; 200-ல் இரண்டு பூஜ்ஜியத்த எடுங்க' - வானதி சீனிவாசன் சொல்வதென்ன?
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மத்திய அரசு மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர்.
நவோதயா பள்ளிகளில் இந்தி கட்டாயம் இல்லை என மத்திய அரசு கூறிவிட்டது. இருப்பினும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் திறக்க மறுக்கின்றனர். திமுக அரசு தங்களது சுய லாபத்துக்காக தமிழ்நாட்டை தனி தீவாக உருவாக்கி வருகிறது.
திமுக அரசு பாஜக மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்துவதை விடுத்து மக்கள் பிரச்னைளில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் திமுகவுக்கு தகுந்த மதிப்பெண் வழங்குவார்கள்.
திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதில் இரண்டு பூஜ்ஜியங்களை நீக்கினால் உள்ள தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெறும் நிலை உள்ளது. திமுக அலை எங்கு வீசுகிறது என 2026ம் ஆண்டு பார்ப்போம்.
`தமிழகம் கழிவுகளை கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல’
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சரை யாரோ நம்ப வைத்துள்ளனர். கள நிலவரத்தை அவர் உணரவில்லை என்று தெரிகிறது. அவர் வேறு ஏதாவது ஏஜென்ஸி வைத்து விசாரித்தாலே உண்மை தெரிந்துவிடும். கேரளாவிலிருந்து மருத்துவ கழிவு கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் பிரச்னை கோவை மாவட்டத்திலும் உள்ளது.
இதை மாவட்ட நிர்வாகம் கவனமாக கண்காணித்து தடுக்க வேண்டும். தமிழகம் கழிவுகளை கொட்டும் குப்பைத்தொட்டி அல்ல. இது குறித்து பாஜக மாநில தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பசுமை தீர்ப்பாயம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.” என்றார்.