`மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகிறது' - அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றச்சாட்டு
மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாகவும், அதன் காரணமாகவே பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாகவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் அண்ணா நூலகத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. இந்த ஓவிய கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``மாவட்டக் கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிய அரசுதான் கல்வித்துறைக்கு நிதி வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க தடை போடுகிறார்கள்." எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து தன் எக்ஸ் பக்கத்தில், ``கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். இந்திய ஒன்றியத்திற்கு முன்மாதிரியாக கல்வியில் வளர்ச்சி அடைந்துள்ள தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு வகைகளிலும் கல்வியில் சாதனை புரியும் நமது மாணவச் செல்வங்களையும், ஆசிரியப் பெருமக்களையும் ஒன்றிய அரசு ஏமாற்றி வருகின்றது. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். எங்கள் பிள்ளைகளையும் ஆசிரியப் பெருமக்களையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மாணவர்களுக்கு என்ன மாதிரியான அறிவுசார் பயிற்சிகள் வழங்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு எடுத்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.