அல்லு அர்ஜுன் வீட்டில் கல் வீசியவர்களுக்கு ஜாமீன்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை முற்றுகையிட்டு கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த 4-ஆம் தேதி திரையிடப்பட்ட ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சிக்கு காவல்துறையின் அனுமதி பெறாமல், திடீரென்று அல்லு அர்ஜுன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண் ஒருவர் மரணமடைந்தார்.
இதையும் படிக்க : தமிழகத்தை நோக்கி திரும்பிய புயல் சின்னம்: சென்னை, கடலோர மாவட்டங்களில் மழை!
உயிரிழந்த பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டு ஒஸ்மானியா பல்கலைக்கழக செயற்குழுவை சேர்ந்த உறுப்பினர்களாகக் கருதப்படும் சிலர் ஞாயிற்றுக்கிழமை அல்லு அர்ஜுன் வீடு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘திரைப்படங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறீர்கள்; ஆனால் அவற்றைக் காண வருவோர் சாக வேண்டுமா?’ என்ற வாசகத்துடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காண முடிந்தது.
இதனிடையே, அல்லு அர்ஜுன் மீதான எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதமாக அவரது வீட்டின் கதவைத் தாண்டிக் குதித்து உள்ளே சென்ற சிலர், அங்கு வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை உடைத்தும் வீட்டின் மீது கல் வீசி எறிந்தும் தாக்குதல்களை நடத்தியதால் சலசலப்பு உண்டானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோரில் 6 பேரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.