பயிற்சி பிட்சுகளால் இந்திய அணி அதிருப்தி! -மெல்போர்ன் திடல் மேற்பார்வையாளர்
Allu Arjun : `அல்லு அர்ஜுன் நடிப்பது நல்ல படமா... பா.ரஞ்சித் படங்களைப் பாருங்கள்!' - ஹைதராபாத் ஏசிபி
நடிகர் அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் பிரீமியர் ஷோவிற்கு முன் அறிவிப்பின்றி சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, படம் பார்க்கக் குடும்பத்துடன் சென்ற பாஸ்கர் மனைவி (39) பலியானதும், அவரது மகன் (9) கோமாவில் இருப்பதும் பெரும் பேசுபொருளாகி வருகிறது.
இது குறித்து சட்டசபையில் அல்லு அர்ஜுனைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருந்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, "அர்ஜுன் செய்தது மனிதமற்ற செயல். அல்லு அர்ஜுன் வந்தால் கூடும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது என காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும், அவர் அடுத்த நாள் படம் பார்க்க வந்துள்ளார். அதுவும் கார் ரூஃப் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக் கொண்டு வருகிறார்" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த நடிகர் அல்லு அர்ஜுன், "நடந்தது எதிர்பாராமல் நடந்த விபத்து. என் மீது தொடரப்பட்ட வழக்கை நான் சட்டப்படி சந்திக்கிறேன். இந்த விவாகரத்தில் ‘மனித நேயமற்றவன், மோசமானவன்’ என என்னை சித்தரிக்க முயல்வதை நிறுத்துங்கள். அது மிகுந்த வருத்தமளிக்கிறது. காரிலிருந்து வெளியே வந்து முகத்தைக் காட்டினால் ரசிகர்கள் அமைதியாவர்கள் என்றுதான் காரின் சன் ரூஃப் கதவைத் திறந்து ரசிகர்களுக்குக் கை அசைத்தேன். என்னைக் காண வந்த ரசிகர்களுக்கு அதைக் கூட நான் செய்யக்கூடாதா?" என்று பேசியிருந்தது பரபரப்பைக் கிளப்பியது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் விவகாரம் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹைதராபாத் ஏசிபி விஷ்ணு மூர்த்தி, "அல்லு அர்ஜுன் செய்தது தவறு. அவர், சட்டத்தை மதித்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். சினிமாவில் காவல்துறையினரை தவறாகக் காட்சிப்படுத்தி, அலட்சியமாக நடத்தி, காவல்துறையினரை கீழ்த்தரமாக நடத்துவது போல நடிக்கிறார். நிஜத்தில் அப்படியெல்லாம் செய்ய முடியாது. யாராக இருந்தாலும் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்களே.
அல்லு அர்ஜுன் நடிக்கும் படங்களில் நல்ல விஷியம் ஏதுமிருக்கிறதா? அவையெல்லாம் கதாநாயக வழிபாடு சினிமாவாகவே இருக்கின்றன. மக்களை ஏமாற்றும் சினிமாவாகவே இருக்கின்றன.
மக்கள் நல்ல சினிமாக்களைப் பார்க்க வேண்டும். ஓடிடி, தியேட்டர் என நாட்டில் எவ்வளவு நல்ல சினிமாக்கள், சமூக பிரச்னைகளைப் பேசும் சினிமாக்கள் வெளியாகின்றன. பா.ரஞ்சித் போன்ற இயக்குநர்களின் படங்களை எல்லாம் மக்கள் பார்க்க வேண்டும். நல்ல சினிமாவிற்கு அதரவுத் தர வேண்டும். சமூகத்தைக் கெடுக்கும் சினிமாக்களுக்கு ஆதரவுக் கொடுக்கக் கூடாது. கதாநாயக வழிபாடு சினிமாக்களைக் கொண்டாடாதீர்கள், அதுதான் இங்கு நடக்கும் பல பிரச்னைக்குக் காரணமாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.
இது பெரும்பேசுபொருளாக சர்ச்சைகள் வெடித்த நிலையில் காவல்துறையின் (DSP) அனுமதியின்றி பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதாக ஹைதராபாத் ஏசிபி விஷ்ணு மூர்த்தி மீது தற்காலிக இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.