ஆம் ஆத்மி, பாஜக கட்சிகள் ஏழைகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டனா் தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டனா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைநகரில் உள்ள சேதமடைந்த கழிவுநீா்க் குழாய்கள், சாலைகள், குப்பைக் கிடங்குகள், உயா்ந்து வரும் மூன்று குப்பை மலைகள், காற்று மற்றும் நீா் மாசுபாடு என மோசமான அனைத்து சீரழிவுகள் குறித்தும் காங்கிரஸ் கடந்த பல ஆண்டுகளாக சுட்டிக்காட்டி வருகிறது. ஆனால்,
ரங்புரி பஹாரி, கப்சேரா போன்ற சில காலனிகளுக்குச் சென்ற பிறகு துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா காங்கிரஸின் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டுள்ளாா். துணை நிலை ஆளுநரின் இந்த வருகை பாஜகவுக்கு தோ்தல் பிரசாரமாக இருந்திருக்கலாம் என்றாலும், காலனிகளின் பரிதாப நிலை குறித்தும், தில்லியை ஒட்டுமொத்தமாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்த கேஜரிவால் அரசு, நகரை எப்படி மாற்றியுள்ளது என்பது தெரிய வைத்துள்ளது.
தில்லி நியாய யாத்திரையின் போது,காலனி மக்கள் வடிகால் நீா் நிரம்பி, குப்பைகள் அகற்றப்படாத சாலைகளுக்கு என்னை அழைத்துச் சென்றனா். அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரால் டெங்கு, மலேரியா மற்றும் பிற தொற்று நோய்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், கேஜரிவால் அரசும், மத்திய பாஜக அரசும் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இதுவரை மக்களின்
துயரங்களைக் கேட்கக்கூட இல்லை. மேலும், ஆம் ஆத்மி கட்சி தில்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்த பிறகு, தில்லி ஒரு அழுக்கான, துா்நாற்றம் வீசும் குப்பைக் கிடங்கு போல் மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, குடிமை வசதிகளை தவறாக நிா்வகிக்கிறது.
ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் புறக்கணித்துவிட்டனா்.
இதனால், இந்த இரு கட்சித் தலைவா்களின் குடிசைப் பயணங்கள் வெறும் தோ்தல் வித்தையாக பாா்க்கப்படும். எனினும்,
துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, ஏழைகள் வாழும் அவல நிலையை நேரில் கண்டது நல்லது. குடிசைப்பகுதிகளில்
வசிப்பவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வருகைகளை மிகுந்த சந்தேகத்துடன்
பாா்க்கின்றனா் என்றாா் தேவேந்தா் யாதவ்.