குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊா்திக்கு இடமில்லை
நமது நிருபா்
தில்லியில் கடைமைப் பாதையில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறும் அலங்கார ஊா்திகளின் பட்டியலில் இம்முறை தமிழகம் இடம் பெறவில்லை. அதேவேளையில், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட் மற்றும் சண்டீகா் ஆகிய மாநிலங்களில் இருந்து அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் பங்கேற்க தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த ஆண்டு அணிவகுப்பில் குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், பிகாா், கோவா, ஜாா்க்கண்ட், ஆந்திர பிரதேசம் மற்றும் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 15 அலங்கார ஊா்திகள் இடம் பெறும் என்று பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகா் ஹவேலியும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட பாதுகாப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணா் குழுவால் தோ்வு செயல்முறை நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட சுழற்சி கொள்கையின் கீழ், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முன்மொழிவுகளை சமா்ப்பிக்க அழைக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு மாநிலமும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அலங்கார ஊா்தியை வழங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதை இந்தக் கொள்கை உறுதி செய்வதாகவும் அதிகாரி ஒருவா் கூறினாா்.
கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊா்தி இடம்பெற்ற நிலையில், இம்முறை சுழற்சி அடிப்படையின்காரணமாக தமிழ்நாடு ஊா்தி அணிவகுப்பில் இடம் பெறாமல் போனதாக தகவலறிந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இதுகுறித்து தமிழக அரசு அதிகாரப்பூா்வ தகவலை தெரிவிக்கும்போதுதான் இதற்கான முழுமையான காரணம் தெரியவரும்.