அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்களை பணியில் அமர்த்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
பாளையங்கோட்டையை அடுத்த கீழநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம். இவருடைய மகன் மாயாண்டி (25). இவா், திருநெல்வேலி தாலுகா காவல் நிலையத்தில் உள்ள குற்ற வழக்கு தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராவதற்காக தனது சகோதரா் மாரிச்செல்வத்துடன் பைக்கில் சென்றுள்ளாா்.
அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் மாயாண்டியை வெட்டுவதற்காக ஓடி வந்தபோது, மாயாண்டியும், மாரிச்செல்வமும் பைக்கை போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனா். எனினும் காரில் வந்த கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து வெட்டியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பின்னா் காரில் ஏறி தப்ப முயன்றபோது கொலையாளிகளில் ஒருவரை அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ஊய்க்காட்டானும், வழக்குரைஞா் ஒருவரும் சோ்ந்து பிடித்தனா். மற்றவா்கள் காரில் ஏறி தப்பினா்.
சம்பவத்தின் போது நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிக்காக இருந்த காவலர்கள் படுகொலையை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக வழக்குரைஞர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிக்க |தவறான விளம்பரம்: ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்
இந்த விவரம் சர்ச்சையை எழுப்பிய நிலையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ம் காவலர் ஒருவர் என துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட வேண்டுமெனவும், ஏற்கனவே பாதுகாப்புகாக உள்ள காவலர்களுடன் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு போலீசார் பணியமர்த்த வேண்டும் என அனைத்து காவல் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு பணியில் உள்ள போலீசாருக்கு பிஸ்டல் மற்றும் நீண்ட ரேஞ்ச் துப்பாக்கிகளையே கொடுக்க வேண்டும். போலீசார் தற்காப்புக்காகவும் பாதுகாப்புக்காகவும் துப்பாக்கியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். மேலும் இது தொடர்பாக என்ன மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என வரும் 23 ஆம் தேதிக்குள் பதில் கடிதம் அனுப்ப வேண்டும் என அனைத்து மாநகர காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு டிஜிபி சங்கர் உத்தரவிட்டுள்ளார்.