நாகை- இலங்கையிடையே ஜனவரியில் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு வாய்ப்பு: ஆட்சியா் த...
தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்; மீனவா்களை பாதுகாக்க வேண்டும்: முத்தரசன் கண்டனம்
தொடரும் கடற்கொள்ளையா்கள் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகில் உள்ள ஆறுகாட்டுதுறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை (டிச.20)கோடியக்கரைக்கு தென்கிழக்கு திசையில் கடலுக்கு மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்தப் பகுதிக்கு வந்த கடற் கொள்ளையர்கள் ஆறு பேர், மீன் பிடித்துக் கொண்டிருந்த மூன்று தமிழக மீனவர்களை தாக்கி, அவர்களது படகுகளை சேதப்படுத்தி ஜிபிஎஸ் கருவி உட்பட மீன்பிடி கருவிகளையும் மீன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
இதே போல், அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கா.ராஜ்குமார், கா.ராஜேந்திரன், சென்னையை சேர்ந்த எம்.நாகலிங்கம் ஆகியோர் கோடியக்கரையின் தென் கிழக்கு திசையில் உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த ஆறு கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களது படகும், மீன் பிடி கருவிகளையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதே போல பெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர் இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க |அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: டிஜிபி உத்தரவு
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வுரிமையை பாதுகாக்க உதவும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் தொடரும் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் அதிகரித்து வருவது ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த 16 ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசநாயக புதுதில்லி வந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசிய போது, மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கை அதிபருக்கு எக்ஸ் தளம் மூலம் வேண்கோள் விடுத்துள்ளார். ஆனாலும், இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் தடுக்கப்படாமல் நீடிப்பது மீனவர்கள் வாழ்வாதாரத்தை அடியோடு நிராகரிக்கும் செயலாக அமைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும், பிரதமரும் அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்கள் உயிர், உடமைகளும் பாதுகாப்பதுடன், கடலில் அமைதியான சூழலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.