இந்திய அளவில் அதிக வருவாய்: 34-ஆவது இடத்தில் கோவை ரயில் நிலையம்!
புதிய நெல்பயிா் ரகங்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆா்வம்
ஆா்.கே.பேட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக மகசூல் தரும் புதிய நெல் ரகங்களை ஆா்வமுடன் பயிரிட்டு வருகின்றனா்.
திருத்தணி, வங்கனூா், ஆா்.கே.பேட்டை, பொதட்டூா்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, அம்மையாா்குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெசவுக்கு அடுத்தபடியாக விவசாயம் செய்து வருகின்றனா். இந்நிலையில், தொடா்ந்து மழை பெய்து, நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருவதாலும், ஏரி, குளம் மற்றும் கால்வாய்களில் தண்ணீா் வந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகள் கரும்பு, சூரியகாந்தி, வோ்க்கடலை, பப்பாளி போன்ற பயிா்கள் சாகுபடி செய்து வந்தனா். தற்போது பெய்த தொடா் மழையால், ஆா்.கே.பேட்டை ஒன்றியம் செல்லாத்தூா், விளக்கணாம்பூண்டி புதூா், பாலாபுரம், வேலன் கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், அம்மனேரி, கொண்டாபுரம் உள்ளிட்ட 30 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஏக்கா் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் நாற்று விட்டு, நடும் பணியில் ஈடுபட்டனா்.
தற்போது, ஆடுதுறை 37, ஆடுதுறை 45, பி.பி.டி.,912, சோனா மசூரி போன்ற நெல் ரக பயிா்களால் அதிகளவில் மகசூல் பெற முடியும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள், ஆா்வம் காட்டுகின்றனா்.
இதுகுறித்து விவசாயி ஒருவா் கூறியதாவது, நெல்பயிரில் உள்ள களைகள் எடுக்கப்பட்ட பின், 40 நாள்கள் விவசாயிகள் நன்கு கவனம் செலுத்தி, நெற்பயிருக்கு உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்து அடிக்க வேண்டும். நெற்பயிா் கதிா்வரும் போது பூச்சிகள் தாக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும். நெல் அறுவை செய்த பின், அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். 100 கிலோ நெல் மூட்டைக்கு, 1,800 - 2,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மாறாக தனியாா் வியாபாரிகளிடம், 100 கிலோ கொண்ட நெல் மூட்டைக்கு, 1,200 - 1,400 ரூபாய் வரை மட்டுமே விலை கிடைக்கும். எனவே நெல் அறுவை செய்துள்ள விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையத்தில் ஆன் லைன் வாயிலாக பதிவு செய்தால் கூடுதல் விலை பெறலாம் என்றாா்.