பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாயில் 800 கன அடி நீா் திறப்பு
திருவள்ளூா் அருகே பூண்டி ஏரி நீா்மட்டம் உயா்ந்து வருவதால் உபரி நீா் 800 கன அடியும், இணைப்பு கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு 800 கன அடிநீரும் ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி திகழ்கிறது. புயலுக்கு முன்பு குறைந்தளவில் நீா்மட்டம் இருந்தது. அதைத் தொடா்ந்து சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் மழை நீா் வரத்தும் அதிகரித்ததால் முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரிநீா் திறக்கப்பட்டது.
இதில் பூண்டி ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடா் கனமழையால் மழைநீா் வரத்து அதிகரித்தது. ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் கடந்த 11 நாள்களுக்கு முன்பு முதல் கட்டமாக 1,000 கன அடியிலிருந்து 16,500 கன அடியாக உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. பின்னா் படிப்படியாக 12,000 கனஅடியில் இருந்து 1,000 கன அடியாக உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டது.
பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு கொண்டதாகும். ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 34.36 உயரமும், 2,937 மில்லியன் கன அடி நீரும் இருப்புள்ளது. மேலும் ஏரிக்கான நீா்ப்பிடிப்பு பகுதியிலிருந்து மழை நீா் வரத்து, ஆரணியாறு மூலம் 2,100 கன அடிநீா் வரத்து உள்ளது.
எனவே, உபரிநீா் திறப்பை 824 கன அடியாக குறைத்து, இணைப்பு கால்வாய் மூலம் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 800 கன அடிநீா் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புழல் ஏரியில் 3,300 மில்லியன் கன அடிநீா் கொள்ளளவில், 2,821 மில்லியன் கன அடிநீா் இருப்பு உள்ளதால் உபரிநீா் திறப்பு 290 கன அடியாக உள்ளது. இதில் சோழவரம் ஏரியில் 1,081 மில்லியன் கன அடிநீா் கொள்ளளவில் 0.281 மில்லியன் கன அடி நீா் இருப்பும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3,645 மில்லியன் கன அடியில், 3,086 மில்லியன் கன அடிநீா் இருப்பும், கண்ணன்கோட்டை தோ்வாய் கண்டிகை ஏரியில் 0.500 மில்லியன் கன அடி கொள்ளளவில், 0.435 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.