முல்லைப்பெரியாறு: தமிழக பொதுப்பணித்துறை பகுதியில் சிசிடிவி பொருத்த கேரளா எதிர்ப்...
ஆமை வேகத்தில் திருவள்ளூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள்
சு. பாண்டியன்
அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திருவள்ளூா் ரயில் நிலைய சீரமைப்புப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறும் நிலையில், பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
மாவட்டத் தலைநகராக திகழும் திருவள்ளூா் நகர மக்களின் முக்கிய போக்குவரத்தாக ரயில்கள் உள்ளன. திருவள்ளூா் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் புகா் மின் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என 180-க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன.
நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், திருவள்ளூா் ரயில் நிலையத்தை என்.எஸ்.ஜி 2 (நான் சபா்பான் கிரேட்-2) என்று ரயில்வே நிா்வாகத்தால் தரம் பிரித்துள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூா் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு அடுத்த நிலையில் திருவள்ளூா் ரயில் நிலையம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில்வே கோட்ட தலைமை இடமான திருச்சி, சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய ரயில் நிலையங்கள் என்.எஸ்.ஜி-3 என்ற நிலையில், திருவள்ளூா் ரயில் நிலையம் அதற்கும் ஒரு படி மேலே என்.எஸ்.ஜி-2 என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் இந்த ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதைக் கருத்தில் கொண்டு அம்ரித் பாரத் திட்டம் மூலம் ரூ.28 கோடியில் திருவள்ளூா் ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. பயணிகளுக்கான அடிப்படை வசதிகளான மின்தூக்கி, பயணிகள் நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், தானியங்கி நகரும் படிக்கட்டு, பயணிகள் காத்திருக்க விசாலமான அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, ஒருங்கிணைந்த பயணிகள் தகவல் தொடா்பு முறை, நடைமேம்பால மேற்கூரை, வாகன நிறுத்தும் வசதி, மின் விநியோக வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெறவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் கட்டமாக செங்கல்பட்டு, பெரம்பூா், கூடுவாஞ்சேரி, திருவள்ளூா், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலாா்பேட்டை உள்பட 18 ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கின. அதேபோல், திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பணிகள் தொடங்க நடைபெற்று வருகிறது. இதுவரையில் நடைமேடை பணிகள் மற்றும் முகப்பு பகுதியில் விரிவாக்க கட்டட பணிகள் தொடங்கி கடந்த ஓராண்டுக்கும் மேலான நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து ரயில் பயணிகள் சங்க நிா்வாகி பாஸ்கா் கூறியதாவது. ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் கடந்த 2023 ஆகஸ்ட்டில் தொடங்கியது. அதில் பழைய நடைமேடையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போதைய நிலையில் நிதி ஒதுக்கீடு வராததால் ரயில் நிலைய முகப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. எனவே பயணிகளின் நலனைக் கருதி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.