Vidaamuyarchi : `அஜித் சார் நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள்; அத்தனை அன்புக்கும்...' - மகிழ் திருமேனி
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், அவரின் மற்றொரு படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஆங்கிலத்தில் சூப்பர் ஹிட் படமான பிரேக் டவுன் என்ற படத்தை தழுவி இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகும் என லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது.
விடாமுயற்சிப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்தப் படத்துக்காக நடிகர் அஜித் உடல் எடைக் குறைத்ததாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் விடாமுயற்சிப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டதாக இயக்குநர் மகிழ் திருமேனி அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக லைகா நிறுவனம் தன் எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் மகிழ் திருமேனியின் நன்றி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``அளவில்லாத அன்பும், நன்றியும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்களுக்கு வழிகாட்டியாகவும், எங்கள் வேலைகளை ஊக்கப்படுத்தும் நபராகவும்... எளிமையின் வடிவமாகவும் நீங்கள் நீங்களாகவே இருந்தீர்கள். தொடர் முயற்சியால் ஏற்படும் வெற்றி தான் இந்த விடாமுயற்சி.
ஒட்டுமொத்த படக்குழுவும் உங்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளது. ஷூட்டிங் தொடங்கிய முதல் நாள் முதல் நிறைவு பெற்ற இந்த நாள் வரை என் மீது செலுத்திய அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் மகிழ் திருமேனி" எனக் குறிப்பிட்டிருக்கிறார். தற்போது இந்தப் பதிவு வைரலாகியிருக்கிறது.