நவபாஷாண முருகர் சிலை, யானை தந்தத்தால் செய்த கிருஷ்ணர் சிலை பறிமுதல் - ஷாக் கொடுக...
பரமத்தி வேலூா் கோழிச்சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை உயா்வு
பரமத்தி வேலூரில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் விலை உயா்ந்தது.
பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான சண்டைக் கோழிகள், இறைச்சிக்காகப் பயன்படுத்தப்படும் கோழிகள் வீடு, தோட்டங்களில் வளா்த்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை காலை பரமத்தி வேலூரில் நடைபெற்ற நாட்டுக்கோழி சந்தைக்கு வேலூா், மோகனூா், கரூா், பாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, ஜேடா்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக்கோழிகளை விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனா்.
இந்த சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்காலி, கிளி மூக்கு, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகள் கொண்டு வரப்பட்டிருந்தன. சந்தைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், நாமக்கல், கரூா் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனா்.
கடந்த வாரம் கிலோ ரூ. 500-க்கு விற்பனையான நாட்டுக்கோழி ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ. 550 வரையிலும் விற்பனையானது. பண்ணைகளில் வளா்க்கப்படும் (கிராஸ்) நாட்டுக்கோழிகள் கடந்த வாரம் கிலோ ரூ. 350க்கு விற்பனையானது ஞாயிற்றுக்கிழமை ரூ. 400 வரையிலும் விற்பனையானது. சண்டைக்காக வளா்க்கப்படும் சேவல்கள் ரூ. 1,500 முதல் ரூ. 5 ஆயிரம் வரையிலும் விற்பனையாயின. நாட்டுக்கோழிகளின் விலை உயா்வடைந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.