'தலித் அறிவு ஜீவி என்றில்லாமல்...' - எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் குறித்து டாக்டர் அழகரசன்
விகடன் பிரசுரத்தில் சமீபத்தில் வெளியான ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலின் விமர்சனக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கலை விமர்சகர் இந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நூல் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார் பேராசிரியர் டாக்டர் அழகரசன்.
"நாம் இதுவரை பார்த்த தொகுப்பு நூல்கள் போல இந்த நூல் இல்லை. மொழி நடையை நுணுகிப் பார்த்து எடிட் செய்து உள்ளனர். இந்த நூலில் கட்டுரை எழுதிய கட்டுரையாளர்கள் குறிப்பிட்ட ஒரு துறையில் வல்லுநராக இருப்பார்கள். அவர்கள் நன்றாகத் தான் எழுதி இருப்பார்கள் என்று அப்படியே விட்டுவிடாமல், எல்லாவற்றையும் சரி பார்த்து செழுமையாக நூலைத் தயாரித்துள்ளனர். அதன் படி பார்த்தால், இந்த நூலைத் தயாரித்த அணியினர் தொகுப்பாளராக இல்லாமல், ஒரு பதிப்பாளராக வேலை பார்த்திருக்கின்றனர்.
அம்பேத்கருடைய பன்முகத்தன்மை!
இந்த நூலைப் பொறுத்தவரை, கட்டுரையாளர்களைத் தெரிந்தவர்கள், பெரிய ஆளுமைகள் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கவில்லை. அம்பேத்கருடைய பன்முகத்தன்மையை வெளியே கொண்டுவருவது மாதிரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து உள்ளனர்.
ஒவ்வொரு கட்டுரையாளரும் எளிதாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. திருமாவளவனிலிருந்து அசோக் கோபால் வரை அனைவரது பணிகள் மற்றும் கொள்கைகளைக் கண்காணித்து அவர்களுக்கேற்ற கேள்விகளைத் தயார் செய்து அவர்களிடம் அந்தப் பணியைக் கொடுத்திருக்கின்றனர். அந்தக் கேள்விகளிலேயே சில இடங்களில் கண்ணிவெடிகள் வைத்திருக்கிறார்கள். இந்த கேள்விகளுக்கு எப்படி பதில் அளிப்பது என்பது ஒரு பெரிய சவால். அது 'இந்தக் கேள்வியை எப்படி எதிர்கொள்வது' என்ற தயக்கத்தை ஒரு சில இடங்களில் தந்தாலும், இன்னும் சில இடங்களில் நாம் வைத்திருக்கின்ற பிம்பத்தை உடைக்கின்றது.
அம்பேத்கர் - பெரியார் முரண்
தமிழகத்தில் அம்பேத்கர் பெரியார் பற்றிய உறவு முரண் 20 வருடங்களாக நாம் பார்த்து வருகிறோம். அது நட்பு முரணாகவும் இருந்திருக்கிறது...பகை முரணாகவும் இருந்திருக்கிறது. இது எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு கி.வீரமணி அவர்களிடம் ஒரு நேர்காணல் உள்ளது. அது தொடர்பாக, அம்பேத்கரிஸ்ட் ஒருவரின் நேர்காணலும் உள்ளது. இரண்டையும் சம அளவில் வைத்துள்ளனர். இதன்மூலம் அம்பேத்கரிஸ்ட் பார்வையில் பெரியார்...பெரியாரிஸ்ட் பார்வையில் அம்பேத்கர் - இரண்டையும் தெரிந்துகொள்ளலாம்.
நிறைய பயணம்...
புகைப்படத்தின் முக்கியத்துவம் எனக்கு நன்கு தெரியும். இந்த நூலில் இருக்கும் புகைப்படங்களின் கதையைத் தனியாகவே ஒரு புத்தகம் போடலாம். ஒரு மிகப்பெரிய ஆளுமையினுடைய புகைப்படங்கள் என்பது வெறும் போட்டோ கேலரி அல்ல. அதற்குப் பின்னால் தருணங்கள், அதன் முக்கியத்துவம் ஆகியவை உள்ளது. இதைப் புரிந்துகொண்டு அதற்கான தனித்துவத்துடன் செய்து இருக்கிறார்கள்.
ஒவ்வொரு தகவலையும் சரிபார்க்கப் பிற மொழிகளில் அம்பேத்கரைப் பற்றி ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிய ஆளுமைகளை உள்ளே கொண்டு வர வேண்டும் என்பதற்காக நிறையப் பயணங்கள் செய்திருக்கிறார்கள்.
இந்த புத்தகத்தில் புகைப்படங்கள் மட்டும் அல்ல, ஓவியங்களும் நம்மை வெகுவாக கவர்கின்றன. ஓவியங்களை ஸ்கெட்ச் பேனா கொண்டு குழந்தைகள் வரையும் ஒரு ஸ்டைலில் வரைந்து இருக்கிறார்கள். இது வாசகர்களுக்கு நாமும் வரைந்து பார்க்கலாமே என்ற ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது.
தனி நூல்...
அம்பேத்கர் சம்பந்தமான ஆட்களை நேர்காணல் செய்து ஷாஜன் எழுதிய கட்டுரைகளைத் தனி நூலாகப் போடவேண்டும் என்பது என் விருப்பம். அம்பேத்கர் நூறு என்ற துணுக்கை சிறுவர் இலக்கியம் போலத் தனி நூலாக வெளியிடலாம்.
பிற மொழிக்காரர்களின் நேர்காணல்கள் ஆங்கில வெர்ஷனில் தனி நூலாக வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றும் விருப்பம். அம்பேத்கர் பௌத்த மதம் மாறினார் என்பதை வெறுமனே சொல்லாமல், தகவல் பிழையை நீக்கி சரியாகக் கூறியுள்ளனர்.
அம்பேத்கருக்கு உலக தலைவர்களுடன் இருந்த நட்பும், தொடர்பும் இந்த நூலில் உள்ளது. அம்பேத்கர் சாதியை எந்தக் கோணங்களில், எந்த பரிமாணங்களில் அணுகி இருக்கிறார் என்பதை இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும். அம்பேத்கர் ஒரு 'தலித் அறிவு ஜீவி' என்பது போன்று இல்லாமல், தலைப்பு அனைத்திலும் 'தலைவர் அம்பேத்கர்' என்பது இடம்பெற்றிருக்கிறது. தலைப்பில் கூட அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று பேசினார்.