மதுரையில் களைகட்டிய மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பரம் தேர்த் திருவிழா! | Pho...
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா இன்று(டிச. 23) நடைபெற்று வருகிறது. வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்கள் முழங்க சாமி தரிசனம் செய்தனர்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளகப்பதைக் குறிக்கும் வகையில் நடைபெறுவது அஷ்டமி சப்பர விழாவாகும்.
மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று சுவாமிக்கும் அம்மனும் அதிகாலை பல்வேறு சிறப்புப் பூஜை, அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
இதனையடுத்து கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மன் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினர்.
சிவனடியார்கள் கயிலாய வாத்தியம் முழங்க கீழமாசியில் வீதியில் புறப்பாடாகிய சப்பரமானது யானைக்கல், கீழ வெளி வீதி, தெற்குவெளிவீதி, மேலவெளிவீதி, வக்கீல் புதுத்தெரு வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலுக்கு வந்தடையும்.
இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும்.
நான்கு வெளி வீதிகளிலும் சப்பரத்தில் வலம் வந்த சுவாமி அம்மனை வழிநெடுகிலும், ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
சப்பரத்தின் முன்பாக சிவாச்சாரியார்கள் அரிசியை தூவியபடி செல்லும்போது கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர்.
இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், நோய் நொடி நீங்கி பசிப்பிணி நீங்கும் என்பது நம்பிக்கை
மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும் இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.