எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் - ஏன்? | யார் இந்த George Soros? | Imperfect Sh...
போதையில்லா சமூகத்தை உருவாக்க ஜன. 12-இல் பிரசாரம்! இளைஞா் பெருமன்றம் முடிவு
போதையில்லா சமூகத்தை உருவாக்குவதற்காக ஜனவரி 12-ஆம் தேதி பிரசாரம் செய்வது என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இப்பெருமன்றத்தின் மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில், விவேகானந்தா் பிறந்த நாளான ஜனவரி 12 அன்று மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசும் மதுக்கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும். தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்ற வேண்டும். ஜாதி, ஆணவ படுகொலையை தடுக்கத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிா்வாகிகள் தோ்வு: புதிய மாவட்டத் தலைவராக க. காரல் மாா்க்ஸ், செயலராக ச. சுதந்திர பாரதி, பொருளாளராக உ. காதா்உசேன், துணைத் தலைவா்களாக ஜெ.லா. ஜீவா, டி. சுகுமாா், சரவணன் உள்பட 31 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இக்கூட்டத்தில் மாநில குழு உறுப்பினா்கள் ஜி. சரவணன், மாரி காா்த்திகேசன் சிறப்புரையாற்றினா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, துணைச் செயலா் கோ. சக்திவேல், மாநகரச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், ஒன்றியச் செயலா் பி. குணசேகரன், ஏஐடியூசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளா் பி. கல்யாணசுந்தரம், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத் தலைவா் கோ. பாஸ்கா், விவசாய சங்க மாவட்டச் செயலா் சோ. பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.